புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என முன்னதாக அறிவித்திருந்தது.
தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக...
இந்நிலையில், தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக வேளாண்ட் துறைக்கென தனி பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
முன்னதாக, தமிழ்நாட்டின் முதல் காகிதமில்லா இ-பட்ஜெட் சென்னை, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நேற்று (ஆக.13) தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம்பெற்ற பெட்ரோல் விலை மூன்று ரூபாய் குறைப்பு, மகளிர் பேறுகால விடுப்பு 12 மாதங்களாக நீட்டிப்பு உள்ளிட்ட அம்சங்கள் மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.
விவசாயிகள் எதிர்பார்ப்பு
இந்நிலையில், விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்வது, பாசன வசதி இல்லாத பகுதிகளுக்கு பாசன வசதி ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற பல ஆண்டுகளாக அரசிடம் முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் இந்த பட்ஜெட் அமையும் என எதிர்பார்த்து விவசாயிகள் காத்துள்ளனர்.
மூன்றாவது மாநிலம்
முன்னதாக, கர்நாடகா, ஒருங்கிணைந்த ஆந்திரா ஆகிய மாநிலங்கள் வேளாண் துறைக்கென தனி பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ளன. இம்மாநிலங்களைத் தொடர்ந்து தமிழ்நாடு மூன்றாவது மாநிலமாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வது குறிப்பிடத்தக்கது.