கரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதால் திருப்பூர் கோவை மாவட்டங்களில் உள்ள நூற்பாலைகளில் வேலைசெய்வதற்குப் போதுமான தொழிலாளர்கள் கிடைக்கவில்லை.
இதனால் தனியார் நூற்பாலைகளில் சட்டவிரோதமாகப் பணியமர்த்தப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த 8 முதல் 12ஆம் வகுப்பு மாணவிகளை மீட்கக் கோரி திருவண்ணாமலையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், தமிழ் தேசிய மக்கள் கட்சி தலைவருமான சிவ பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அதில், ”திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான சிறுமிகள் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள தனியார் நூற்பாலை ஒன்றில் குறைந்த சம்பளத்துக்கு பணியமர்த்தப்பட்டு உள்ளனர். தொடர்ச்சியாக 12 மணி நேரத்திற்கும் மேலாகப் பணிபுரிய அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
திருப்பூர், கோவை மாவட்டங்களில் சட்டவிரோதமாகப் பணியமர்த்தப்பட்டுள்ள சிறுமிகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திருவண்ணாமலை, திருப்பூர், கோவை மாவட்ட ஆட்சியர்கள், திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர், தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், அவிநாசியில் உள்ள தனியார் மில் நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது, அரசுத் தரப்பில் இதுவரை 30க்கும் மேற்பட்ட சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை நாளை (ஜுலை 30) விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.