சென்னை: பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வில் ஒரு லட்சத்து 63 ஆயிரம் இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 406 மாணவர்களே கல்லூரியில் சேர்வதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
தொழிற்கல்வி மாணவர்களுக்கு கடந்த 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற்ற கலந்தாய்விற்கு, ஆயிரத்து 533 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 946 மாணவர்கள் மட்டும் தங்களுக்கான கல்லூரிகளைத் தேர்வு செய்துள்ளனர். பொறியியல் படிப்பு மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு அக்டோபர் 8ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
இக்கலந்தாய்விற்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 873 மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொது கலந்தாய்வில் முதல் சுற்று தரவரிசைப் பட்டியலில் 199.75 முதல் 175 வரையில் கட் ஆப் மதிப்பெண் பெற்ற 12 ஆயிரத்து 263 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதில் 10 ஆயிரத்து 200 மாணவர்கள் மட்டுமே கட்டணம் செலுத்தினர். இவர்களில் 7 ஆயிரத்து 510 மாணவர்கள் மட்டும் கலந்தாய்வில் தங்களுக்கான கல்லூரிகளை தேர்வு செய்துள்ளனர்.
இரண்டாவது சுற்றில் தரவரிசைப் பட்டியலில் 174.75 முதல் 145.5 வரையில் கட் ஆப் மதிப்பெண் பெற்ற 22 ஆயிரத்து 904 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சுமார் 16 ஆயிரம் மாணவர்கள் கட்டணத்தை செலுத்தி உள்ளனர். இவர்களுக்கு கல்லூரி, பாடப்பிரிவு தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதனை மாணவர்கள் உறுதி செய்து வருகின்றனர். தற்காலிக ஒதுக்கீட்டு இடங்களை உறுதி செய்த பின்னர், நாளை (அக்.20) இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படவுள்ளது. இந்தச் சுற்றிலும் சுமார் 6 ஆயிரம் இடங்களுக்கு மேல் காலியாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மூன்றாவது சுற்றில் தரவரிசைப் பட்டியலில் 145 முதல் 111.75 வரையில் கட்-ஆப் மதிப்பெண் பெற்ற 35 ஆயிரத்து 132 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 16ஆம் தேதி முதல் இன்று ( அக்.19) மாலை 5 மணி வரையில் கட்டணங்களை செலுத்தலாம்.
நாளையும்(அக்.20), நாளை மறுநாளும்(அக்.21) மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரி, பாடப் பிரிவினை பதிவு செய்யலாம். வரும் 22ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. வரும் 22, 23 ஆகிய தேதிகளில் தற்காலிக ஒதுக்கீட்டு இடங்களை உறுதிச் செய்த பின்னர், 24ஆம் தேதி இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். நான்காவது சுற்றில் உள்ள மாணவர்கள் நாளை(அக்.20) முதல் கட்டணங்களை செலுத்த முடியும். பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 90 ஆயிரத்திற்கு மேல் காலியிடங்கள் இந்தாண்டு இருக்கும் எனத் தெரிகிறது.