செங்கல்பட்டு: Spiritual: தமிழ்நாட்டில் மட்டுமல்லாது நாடெங்கும் கரோனா, ஒமைக்ரான் போன்று பல வைரஸ்கள் ஒருபுறம், சாதி, மதம் போன்ற பிரச்னைகள் மறுபுறம் தலைவிரித்தாடி, நாட்டு மக்களை விழிபிதுங்க வைத்துக்கொண்டுள்ளது.
இந்நிலையில் ஆன்மிகம் சார்ந்த புதுப்புது பிரச்சினைகள் கிளம்பி வருவது, பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. தற்போது புதிதாக, ஆதி பராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டு, அட்டகாசம் செய்யும், அன்னபூரணி என்ற பெண்மணியைப் பற்றிய வீடியோ, காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வைரலாகிப் பரவி வருகின்றன.
அவதார அலப்பறைகள்
ஏற்கெனவே மேல்மருவத்தூரில் புகழ்பெற்ற ஆதிபராசக்தி சித்தர் பீடம் உள்ளது. தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இந்த சித்தர் பீடம் குறித்து நீதிமன்றத்தில் சில உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 'ஆதிபராசக்தி' என்று அன்னபூரணி என்ற பெண்மணியை சிலர் வழிபடுவது குறித்த காணொலி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஏனெனில், முன்னதாக இக்குறிப்பிட்ட அன்னபூரணி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த நிகழ்ச்சியில், மற்றொரு பெண்ணின் கணவரிடம், திருமணத்தைமீறிய உறவு வைத்திருப்பதாக அந்த அன்னபூரணியே ஒத்துக்கொண்டுள்ளார்.
அப்படியிருக்க அதே பெண்மணி, ஆதிபராசக்தியின் மறுஅவதாரம் என்று கூறி, தற்போது திட்டமிட்டு பரப்பப்படும் காணொலிக் காட்சிகள் பலரால் சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
இதன் பின்னணியில் யார் உள்ளனர், இதனை உளவுத்துறையினர் கண்காணிக்கின்றனரா? இல்லையா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் இப்பெண்மணி வசிப்பதாகத் தெரியவருகிறது. ஆனால், இதுகுறித்து காவல் துறையினரோ உளவுத்துறையினரோ வாய் திறக்க மறுக்கின்றனர்.
அம்மனுக்கு அவப்பெயர்- நடவடிக்கை எடுக்குமா அரசு?
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அன்னபூரணி, தன்னை அம்மனின் அவதாரம் என்றும்; ஆதிபராசக்தியின் மறு உருவம் என்றும் கூறிக்கொண்டு உலவுவதை, தமிழ்நாடு அரசு எப்படிவிட்டு வைத்துள்ளது என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கேள்வி கேட்கின்றனர்.
இதுபோன்ற நிலை தொடர்ந்தால், பக்தியின் பெயரால், பல அப்பாவி பக்தர்கள் பொருளாதாரச் சுரண்டலுக்கு உள்ளாகி, வறுமை நிலைக்குத் தள்ளப்படுவர் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
இதையும் படிங்க:Thirunallar : பக்தர்கள் - யாசகர்கள் - வியாபாரிகள் - மீண்டும் பக்தர்கள்: ரிப்பீட்டு முறையில் சப்ளை ஆகும் கெட்டுப்போன உணவு