மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சின்னராஜா(48). இன்று காலை இவர் படுக்கை அறையை விட்டு வெளியே வராததால் குடும்பத்தினர் சந்தேகமடைந்து கதவை உடைத்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சின்னராஜா உயிரிழந்தது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கையில், தற்கொலைக்கு முன்பு அவர் வீடியோ ஒன்றை பதிவு செய்து முகநூலில் பதிவேற்றியிருந்தது தெரியவந்துள்ளது. அந்த வீடியோவில், ரியல் எஸ்டேட் தொழில் சரியாக இல்லாததால் உயிரை மாய்த்துக்கொள்ளப் போகிறேன் என கண்ணீருடன் கூறியிருந்தார். மேலும் கடன் பிரச்னை காரணமாக சின்னராஜா தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் சின்னராஜா மனைவி ரீட்டாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.