அரியலூர்: ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்லூரி இளைஞர்களை அரசியல் ரீதியாக ஊக்குவிப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் ஆண்டுதோறும் 'இளையோர் பாராளுமன்றம்' என்ற தலைப்பில் அரசு உதவியுடன் கல்லூரிகளில் மாதிரி பாராளுமன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இளையோர் பாராளுமன்றம் - 2023க்கான நிகழ்ச்சி அரியலூர் நெல்லியாண்டவர் தொழில்நுட்ப கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
மேலும் நிகழ்ச்சியில் பங்குபெற்று அமைச்சர் பேசியதாவது, ”நம்முடைய வாழ்க்கை ஒரு மனிதனின் வாழ்க்கையை போல நம்முடன் மட்டும் முடிந்துவிடாமல் நம்முடைய சமுதாயத்திற்கு பயன்படும்படியாக இருக்க வேண்டும் என்பதற்காக நேரு யுவ கேந்திரா என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் இளைஞர்களை இணைத்து ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வகையில் இது போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டியது பொதுமக்களின் கடமையாகும். இதில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் இந்தியாவில் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்கிறது” என்றார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், ''தாய்மொழியை பாதுகாக்க போரிட்டவர்கள் நமது தமிழர்கள் என்பதனால் பேசும் மொழி நமது அடையாளம் ஆகும். எனவே, நமது அடையாளத்தை இழக்கக்கூடாது. நமது மொழியை பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்'' என்று மாணவர்களிடையே வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து நீட் குறித்து தமிழக அரசு மற்றும் ஏழை எளிய மக்களின் எதிர்ப்பைப் முன்வைத்தும் பேசினார். பின்னர் பேசிய அமைச்சர், ”இந்தியா முழுவதும் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கையை 50% உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை மேற்க்கொண்டு வருகிறது. தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களை தவிர்த்துப் பிற மாநிலங்களில் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 25%ஆக உள்ள நிலையில் இந்நடவடிக்கைகள் செயல்படுத்தாத போதிலும் தமிழகத்தில் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 52%ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு காரணம் பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் தமிழகத்தில் செயல்படுத்திய கல்வித் திட்டங்களே ஆகும். இதைத்தொடர்ந்தே தமிழக முதலமைச்சர், படித்த இளைஞர்கள் திறன் பயிற்சியுடன் வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார் என்று பெருமிதம் கொண்டார்.
இதே போன்று மாணவிகள் உயர்கல்வி படிக்கும்போது மாதம் ரூ.1000 பெறும் வகையில் புதுமைப் பெண் திட்டம், பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.8000 கோடி நிதி ஒதுக்கீடு, உயர் கல்வியை மேம்படுத்தும் வகையில் ரூ.3000 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தொழிலதிபர்களை தமிழகத்தில் முதலீடு செய்து புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் மேலும் இம்மாதிரியான நடவடிக்கைகளால் இந்தியாவில் பிற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது'' என்றும் இந்நிகழ்ச்சியில் பெருமிதம் கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, இளையோர் பாராளுமன்றம் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களை வாழ்த்தி நேரு யுவ கேந்திரா மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கியும், தண்ணீர் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை வெளியிட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பின்னர், இந்தியா–ஜி20 தலைமையின் முக்கியத்துவம், சர்வதேச சிறுதானிய ஆண்டு – 2023, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற அன்றாட வாழ்க்கை முறை என்ற தலைப்புகளில் கருத்தரங்குகளும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும் இந்நிகழ்வில், மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா, நேஷனல் கல்விக்குழும நிறுவனத் தலைவர் சிலம்புசெல்வன், நெல்லியாண்டவர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கண்ணன் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் களைகட்டும் புத்தகத்திருவிழா..விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி தொடங்கிவைப்பு!