32ஆவது கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளும் டோக்கியோவில் தீவிரமாக நடைபெற்றுவந்தன.
இதனிடையே, கோவிட்-19 வைரஸ் தொற்றால் ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டிகள், உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜப்பான் கால்பந்து சம்மேளனத்தின் தலைவரும் அந்நாட்டின் ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவருமான கோசோ தாஷிமாகுக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர் கடந்த பிப்ரவரி மாதம் பிரிட்டன், நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு வணிக ரீதியாகப் பயணம் மேற்கொண்டார்.
அந்தப் பயணத்தின்போதுதான் இவருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று பரவியிருக்கக்கூடும் என ஜப்பான் கால்பந்து சம்மேளனத்தின் நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது. 62 வயதான கோசோ தாஷிமா, 2016ஆம் ஆண்டில் ஜப்பான் கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க ட்ரம்ப் அறிவுறுத்தல்!