கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்திய ஹாக்கி அணியைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் இரண்டு மாதங்களுக்கு மேலாக தங்களது வீடுகளில் தனிமைப்படுத்துதலை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கு தேவையான பயிற்சிகளை வீரர்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், இந்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதியளிக்கும்படி இந்திய ஹாக்கி சம்மேளனம் வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்நிலையில் கடந்த 10ஆம் தேதியே பயிற்சிக்கு திரும்பிய ஹாக்கி வீரர்களுக்கு, நான்கு வார காலம்வரை விடுப்பு எடுக்க அனுமதியளிக்க வேண்டும் என்ற அணியின் பயிற்சியாளர்கள் கிரஹாம் ரீட் மற்றும் ஸ்ஜோர்ட் மரிஜ்னே(Graham Reid and Sjoerd Marijne) ஆலோசனைப்படி இந்திய ஹாக்கி சம்மேளனம் அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் முகமது முஷ்டாக் அகமது கூறுகையில், "இரு அணிகளின் தலைமை பயிற்சியாளர்களுடன் கலந்தாலோசித்த பின்னர், வீரர்களுக்கு மிகவும் தேவையான இடைவெளியைக் கொடுப்பது முக்கியம் என்று ஹாக்கி இந்தியா முடிவு செய்தது. மேலும் இது அனைவருக்கும் சவாலான நேரமாகும். ஹாக்கி பயிற்சி இடைநிறுத்தப்பட்டபோது வீரர்களின் உடல் மற்றும் மன நலனை உறுதி செய்ய இந்த இடைவெளி வழங்குவது அவசியமானது" என்று தெரிவித்தார்.