டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. தற்போது, இந்திய அணி பல டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை படைத்தாலும், டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கிய காலக்கட்டத்தில் இந்திய அணிக்கு தொடரை வெல்வது எட்டா கனியாகத்தான் இருந்தது. நீண்ட ஆண்டுகளாக இந்திய அணிக்கு கிடைக்காமலிருந்த இக்கனியை முதன்முதலில் ருசிக்கச் செய்தவர் லாலா அமர்நாத். இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றைப் பற்றி தெரிந்தவர்களுக்கு இவரைப் பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும்.

ஏனெனில், வினோ மான்கட், சி.கே. பட்டோவ்டி ஆகியோரது காலக் கட்டத்தில்தான் இவரும் கிரிக்கெட் விளையாடினார். அப்படி இந்திய அணி சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே 1932இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய இவர், இந்திய கிரிக்கெட்டின் ஆரம்பகால ஹீரோ என்றே கூறலாம்.
லாகூரில் பிறந்த இவர் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கைதேர்ந்தவர். முதல் தர போட்டிகளிலேயே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களையும், 400-க்கும் அதிகமான விக்கெட்டுகளையும் கைப்பற்றி சிறந்த ஆல்ரவுண்டராக விளங்கியவர். இந்தியா - இங்கிலாந்துக்கு இடையே 1933ஆம் ஆண்டில் அப்போதைய பம்பாய் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிதான், இந்தியாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆகும்.
இதில், இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் சதம் அடிப்பதற்கான இன்னிங்ஸை ஓப்பன் செய்தவரே லாலாதான். அப்போட்டியில், 185 பந்துகளில் 18 பவுண்ட்ரிகள் உட்பட 118 ரன்களில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர் அடித்த முதல் சதம் இதுவாகும்.

இதைத்தொடர்ந்து, இந்திய அணி 1947-48இல் ஆஸ்திரேலியாவுக்கு முதன்முறையாக பயணித்தபோது, இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். இந்தத் தொடரில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்தாலும், இவரது ஆட்டத்தை பார்த்து ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனும் வியந்தார்.
மெல்போர்னில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இவர் விக்டோரியா அணிக்கு எதிராக 228 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது ஆட்டத்தைப் பார்த்த டான், யாரெல்லாம் இவரது இந்த ஆட்டத்தைப் பார்த்தார்களோ அவர்கள் நிச்சயம், மெல்போர்ன் மைதானத்தில் இதுபோன்ற ஆட்டத்தைப் பார்த்திருக்க மாட்டார்கள் என்றார்.

இதைத்தொடர்ந்து, 1952இல் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தனது சொந்த மண்ணில் விளையாடியது. சுதந்திரம் பெற்ற பின் இவ்விரு அணிகளும் விளையாடிய முதல் கிரிக்கெட் தொடர் இதுவாகும். இவரது தலைமையிலான இந்திய அணி இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய அத்தியாயத்தை (ஆதிக்கத்தம்) தொடங்கியது. இந்திய அணிக்கு கிடைக்காமலிருந்த வெற்றிக்கனியை ருசிக்கக் காரணமாக இருந்த இவர், அந்தத் தொடரோடு கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெற்றார்.
முதல் தர போட்டிகளில் அவரது ஆல்ரவுண்ட் திறமையை இந்திய அணியுடன் ஒப்பிட்டால் அது குறைவுதான். எனினும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் விட்டுச்சென்ற வெற்றி என்கிற வழியைத்தான் இன்று இந்திய வீரர்கள் பின்பற்றிவருகின்றனர். இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், தேர்வுக்குழுத் தலைவர், பயிற்சியாளர், அதன்பின் கிரிக்கெட் வர்ணனையாளர் என பல பரிமாணங்களில் கிரிக்கெட்டுக்காக அயராது உழைத்தவர்.

இவரது மகன் மொகிந்தர் அமர்நாத்தும் ஆல்ரவுண்டர்தான். 1983 உலகக்கோப்பை தொடரில் அவர்தான் கடைசி விக்கெட்டை வீழ்த்தி, ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்திய கிரிக்கெட்டுக்காக எண்ணற்றப் பங்களிப்பை தந்துள்ள லாலாவுக்கு இன்று 108ஆவது பிறந்தநாள். மிஸ் யூ லாலா அமர்நாத்...!