இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐயின் 39ஆவது தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி கடந்த 23ஆம் தேதி பதவியற்றார். இப்பதவிக்கு கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். சமீபத்தில்கூட இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கங்குலி நியமனம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
இதனிடையே இந்திய அணியின் முன்னாள் வீரரும் கங்குலியின் நண்பருமான வீரேந்திர சேவாக் பிரபல நாளிதழில் எழுதிய கட்டுரையில் கங்குலி பிசிசிஐ தலைவராக நியமனம் செய்யப்பட்டது குறித்து எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையில் அவர், தான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாகக் களமிறக்கப்பட்டதற்கு கங்குலிதான் முக்கியக் காரணம் என்று குறிப்பிட்டார்.
அதுமட்டுமல்லாது 2007ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் விளையாடியபோது டெஸ்ட் போட்டி ஒன்றில் முன்வரிசை வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். ஆனால் அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கங்குலி சிறப்பான முறையில் பேட்டிங் செய்ததை நினைவுகூர்ந்தார். மேலும் அன்றைய தினம் டிரஸ்ஸிங் ரூமில் இங்கு இருக்கும் யாரேனும் ஒருவரில் பின்னாளில் பிசிசிஐ தலைவர் ஆவார் என்றால் அது கங்குலி மட்டுமே என்று தான் சொன்னதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும் அன்று கங்குலி மேற்குவங்கத்தின் முதலமைச்சராகவும் வாய்ப்புள்ளது என்று கூறியதாகக் குறிப்பிட்டிருந்தார். இறுதியில் தனது ஒரு கணிப்பு (கங்குலி பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது) நடந்துவிட்டதாகவும் மற்றொரு கணிப்பு (கங்குலி மேற்குவங்க முதலமைச்சர் ஆவார் என்று கூறியது) எப்போது நடைபெறும் என்று எதிர்நோக்கிக் காத்திருப்பதாக விருப்பம் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: நான் இந்திய அணியை வழிநடத்தியது போல் பிசிசிஐ-யும் ஊழலின்றி வழிநடத்துவேன் - கங்குலி