சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் சூப்பர் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்றைய போட்டியில், மும்பை அணியை எதிர்த்து உத்தர பிரதேச அணி ஆடியது.
இதில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது உ.பி. அணி. தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணியின் கோகுல், முதல் பந்திலேயே ஆட்டமிழ்ந்து வெளியேற, பின்னர் களம் கண்ட ஏக்நாத்-சித்தேஷ் இணை பாரபட்சமின்றி உ.பி. அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.
ஏக்நாத் 46 ரன்களில் வெளியேற, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். சித்தேஷ் 44 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய உ.பி. அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. சம்ர்த் சிங், ஆர்யன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, தொடக்க வீரர் கெளசிக் 9 ரன்னில் ஆட்டமிழக்க, 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து உ.பி. அணி தடுமாறியது. பின்னர் வந்த வீரர்களில் ப்ரியம் கார்க் 23 ரன்களும், செளரப் குமார் 24 ரன்களும் எடுக்க, தொடர்ந்து களம் கண்ட வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக சிவம் துபே, சித்தேஷ், ஷர்துல் தாகூர் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இறுதியாக உ.பி. அணி 19 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியைத் தழுவியது.