கரோனா வைரஸ் காரணமாக 2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் தொடர் எப்போது நடக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் ஐபிஎல் தொடர் நடத்த வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.
இதுகுறித்து ஐபிஎல் தலைவர் ப்ரிஜேஷ் படேல் பேசுகையில், '' 2009ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிலும், 2014ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஐபிஎல் தொடரை ஏற்கனவே நடத்தியிருக்கிறோம். ஆனால் அப்போது ஐபிஎல் நிர்வாகத்திற்கும், பிசிசிஐ-க்கும் கிடைத்த வருவாய் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஐபிஎல் தொடர் வெளிநாட்டில் நடக்குமா என்ற கேள்விக்கு இதுவரை முடிவு செய்யவில்லை என்பதே எனது பதிலாகும்.
இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்த முடியாத சூழல் தொடர்ந்து நிலவினால், எங்களுக்கு வேறு வழியில்லை. வெளிநாட்டில் தொடரை நடத்துவதால் அணி நிர்வாகத்திற்கும், ஐபிஎல் நிர்வாகத்திற்கும் இடையே யார் செலவினை ஏற்றுக்கொள்வார்கள் என்ற கேள்வி வரும். ஸ்பான்சர்கள் விலகுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஏனென்றால் தென் ஆப்பிரிக்காவில் அவர்கள் பொருளே அறிமுகமாகாத நிலையில், அங்கே விளம்பரம் செய்து என்ன கிடைக்கப் போகிறது. அதனால் சில இழப்புகளை சந்திக்க நேரிடும்.
இந்த நேரத்தில் ஐபிஎல் தொடர் நடந்தால் மக்களுக்கு பெரும் ஊக்கமாக இருக்கும். இந்தியா போன்ற நாட்டில் ஐபிஎல் தொடர் நடந்தால், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடப்பதற்கு ஆதாரமாக இருக்கும்.
பார்வையாளர்களின்றி நடத்தினால் கால்பந்து போட்டிகளைப் போன்று விர்சுவல் ரியாலிட்டி முறையில் ரசிகர்களை கொண்டுவர பிசிசிஐ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இந்திய ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்துவது என்பது வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யும் திருமணத்தில் குடும்பத்தினர் இல்லாததைப் போன்றதுதான்'' என்றார்.
