இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல், கடந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இத்தொடரின் 14ஆவது சீசன் இந்தாண்டும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதிசெய்யும் வகையில், ஜனவரி 21ஆம் தேதிக்குள் ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்க வைக்கும் வீரா்கள் பட்டியலை வழங்க வேண்டுமென ஐபிஎல் நிர்வாகக் குழு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் கூறுகையில், "ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை ஜனவரி 21ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
அதேபோல், வீரர்களை வாங்குவது, விற்பது போன்றவற்றுக்கான வர்த்தக நடைமுறை பிப்ரவரி 4ஆம் தேதியுடன் முடிவடையும். மேலும் 8 அணிகளுக்கான வீரர்களை தோ்வு செய்ய சிறிய அளவிலான ஏலம் பிப்ரவரி 3ஆவது வாரத்தில் நடைபெறும்.
அதேசமயம் வீரா்களை ஏலத்தில் எடுப்பதற்கான அதிகபட்ச வரம்பாக ஒவ்வொரு அணிக்கும் கடந்த ஆண்டு ரூ.85 கோடி நிா்ணயிக்கப்பட்டது. அதில் தற்போது மீதமுள்ள தொகையைப் பயன்படுத்தி அணிகள் வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்" என்று தெரிவித்தார்.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை கடந்த ஏலத்துக்குப் பிறகு அணியின் வசம் ரூ.15 லட்சமே உள்ளதால், அதிக ஊதியம் உள்ள இரு வீரர்களை விடுவித்து தனது நிதிநிலையை அதிகரித்துக்கொள்ளும் என தெரிகிறது. அந்த வகையில் கேதார் ஜாதவ், பியூஷ் சாவ்லாவை சிஎஸ்கே விடுவிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.14.75 கோடியை தன்வசம் வைத்து முதலிடத்தையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.10.1 கோடியுடன் இரண்டாம் இடத்திலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ.9 கோடியுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
இதையும் படிங்க: டக்கார் ராலி 2021: விபத்தில் சிக்கிய இந்திய வீரர்!