வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லக்னோவில் நடைபெற்றுவருகிறது. இதில், முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி ரஹீம் கார்ன்வாலின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 187 ரன்களுக்கு சுருண்டது. அபாரமாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்பின்னர் ரஹீம் ஏழு விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதைத்தொடர்ந்து, விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல்நாள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 68 ரன்களை எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜான் காம்பேல் 30 ரன்களிலும், ஷமார் ப்ரூக்ஸ் 19 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர்.இந்நிலையில், இன்று தொடங்கிய இரண்டாம் ஆட்டநாளில் சிறப்பாக விளையாடிய ஷமார் ப்ரூக்ஸ் டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

தொடர்ந்து விளையாடி வந்த அவர் 111 ரன்களில் அமிர் ஹம்சா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் சொற்ப ரன்களில் வெளியேற, இறுதியில் அந்த அணி 83.3 ஓவர்களில் 277 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அமிர் ஹம்சா தனது அறிமுகப் போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதைத்தொடர்ந்து, 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவருகிறது. ஒருகட்டத்தில் 53 ரன்களுக்கு விக்கெட்டுகள் இழக்கமால் இருந்த ஆப்கானிஸ்தான் அணி, ரஹீம் கார்ன்வாலின் பந்துவீச்சின் மூலம் 59 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபக்கம் பொறுப்புடன் விளையாடிய ஜாவித் அஹமதி 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால், ஆப்கானிஸ்தான் அணி 36 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை எடுத்தபோது இரண்டாம் ஆட்டநாள் முடிவுக்கு வந்தது. ஆப்கானிஸ்தான் வீரர் அஃபசர் சஸாய் இரண்டு ரன்களுடன் களத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரஹீம் கார்ன்வால், ராஸ்டான் சேஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.