இந்தியாவில் கரோனா வைரஸால் 748 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளிவராமல் உள்ளனர்.
ஊரடங்கு உத்தரவால் அடிதட்டு மக்கள், தினக்கூலிகள், சிறு, குறு தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசு, தன்னார்வ அமைப்புகள் என செயல்பட்டுகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் கரோனா நிவாரண நிதியாக பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சமும், மாநில அரசின் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சமும் வழங்கியுள்ளார். மக்களிடையே கரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை வீடியோக்களை சச்சின் பதிவிட்டிருந்தார்.
இதனிடையே, ''கடினமான சூழலில் அரசுடன் இணைந்து அனைவரும் கரோனா வைரஸை எதிர்கொள்வோம்'' என சச்சின் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, பிசிசிஐ தலைவர் கங்குலி, சானியா மிர்சா, ஹீமா தாஸ், பஜ்ரங் புனியா என பல்வேறு விளையாட்டு வீரர்களும் கரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு நிதியளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய பிவி சிந்து!