நடிகர் விஷால் தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் கணக்காளராகப் பணியாற்றி வந்தவர் ரம்யா. இவர், நிறுவனத்தின் பணத்தினை மோசடி செய்துவிட்டதாக மேலாளர் ஹரி கிருஷ்ணன் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார் . இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து விஷால் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "எங்கள் விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்த ரம்யா நிறுவனத்தில் பல வருடங்களாக வங்கிக் கணக்குகளை முறைகேடாகப் பயன்படுத்தி ரூ.45 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார் என்பது கண்டறியப்பட்டு, கடந்த ஜூன் 30 ஆம் தேதி காவல்துறையில் புகாரளிக்கப்பட்டு, விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் மோசடி தொடர்புடைய பிரிவின் கீழ் ஜூலை 7 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது
எனவே, ரம்யா இனி எங்கள் நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் பணியாற்றவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் கணக்குத் தொடர்பான எந்த விஷயங்களிலும் இனிமேல் ரம்யாவை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மீறி தொடர்பு வைத்துக்கொண்டால் நிர்வாகம் அதற்கு பொறுப்பல்ல" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.