நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற காரை இறக்குமதி செய்தார்.இந்த காருக்கு நுழைவு வரி செலுத்தாததால் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை.
இதையடுத்து ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வணிக வரி துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்தும் வரி விதிக்க தடை விதிக்கக் கோரியும் நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கிற்கு நேற்று (ஜூலை.13) நீதிபதி சுப்ரமணியம் தீர்ப்பு வழங்கினார். அதில், நடிகர்கள் முறையாக வரிகட்ட வேண்டும் என்றும் திரைப்படங்களில் மட்டும் ஊழல் எதிர்ப்பு, லஞ்ச ஒழிப்பு குறித்து நடித்தால் போதாது. நிஜ வாழ்விலும் அவ்வாறு வாழவேண்டும்.
தமிழ்நாட்டில் நடிகர்கள் நாடாளும் அளவிற்கு வளர்ந்துள்ள நிலையில்,அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என நீதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், சமூகநீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், இதுபோன்ற வரியைப் செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது என்றும், வரி ஏய்ப்பு என்பது தேசத்துரோகம் எனவும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதை முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பானது நேற்று (ஜூலை.13) ஊடகங்களிலும் சமூகவலைதளங்களிலும் வைரலானது. இந்த தீர்பை வைத்து சிலர் விவாதிக்கவும் தொடங்கினர்.

இப்படி ஒருப்பக்கம் இருக்கையில், தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளங்களை வைத்திருக்கும் விஜய் - அஜித் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் மீண்டும் சண்டையிட ஆரம்பித்தனர்.
ஏற்கனவே கரோனாவிற்கு முன்பே சமூகவலைதளத்தில் தல -தளபதி ரசிகர்கள் நீங்கள் பெரிதா நாங்கள் பெரிதா என சண்டையிட்டு ட்விட்டர் ஹேஷ்டேக்குகளை இந்திய அளவில் ட்ரெண்டாகி வரும். சில சமயங்களில் உலக அளவிலும் இந்த ஹேஷ் டேக்குகள் ட்ரெண்டாகும்.
சமீபகாலமாக விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் சமூகவலைதளத்தில் சண்டை இல்லாமல் இருந்தது. தற்போது விஜய்க்கு நீதிமன்றம் அபராதம் விதித்ததையடுத்து அஜித் ரசிகர்கள் #வரிகட்டுங்கவிஜய் என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்ய தொடங்கினர்.
இந்நிலையில், தயாரிப்பாளர் மாணிக்கம் சில மாதங்களுக்கு முன்பு அஜித் தன்னிடம் 1995ஆம் ஆண்டில் ரூ.6 லட்சத்தை வாங்கி இதுவரை திருப்பி தரவில்லை என புகார் அளித்தார். இதை கையில் எடுத்த விஜய் ரசிகர்கள்#கடனைஅடைங்க_அஜித் என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர்.
இப்படி பல நாட்களாக சமூகவலைதளத்தில் சண்டையிடாமல் காத்திருந்த தல - தளபதி ரசிகர்களுக்கு பிரியாணி கிடைத்ததுபோல் மோதிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிக நிதி கொடுத்தது தலைவரா? தளபதியா? - கொலையில் முடிந்த ரசிகர்களின் தகராறு