ஆலயா கிரியேஷன்ஸ் சார்பில் அன்பரசன் தயாரிக்கும் படம் 'முன் பதிவு '. இப்படத்தை ஜி.எம். துரைபாண்டியன் இயக்குகிறார். புதுமுக இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் துரைபாண்டி, இசைஞானி இளையராஜாவை புகழ்ந்து பாராட்டினார். அவர் கூறியதாவது, அறியாத வயதில், புரியாத மனதில் எழும் பாலினக் கவர்ச்சியை காதல் என்று தவறாகப்புரிந்து கொண்டு தங்கள் எதிர்காலத்தையும் நண்பர்கள் பெற்றோர்களுக்கு இடையேயான உறவுகளையும் கெடுத்துக்கொள்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் கதைதான் முன்பதிவு என்றார்.
அப்போது, இந்தக் கதையை இசைஞானி இளையராஜா கேட்டதும் அவருக்குப் பிடித்து விட்டது.கதையைக் கேட்ட இளையராஜா ஒரு நிபந்தனை விதித்தார். கதையை அப்படியே சொன்னபடி படமாக எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இளையராஜா இசை அமைக்க சம்மதித்ததும் படத்தின் மீது நம்பிக்கை வந்துவிட்டது.இளையராஜா ஒரு பாடலைப் பதிவு செய்து கொடுத்துவிட்டார். ஜூன் 26ஆம் தேதி மற்ற பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்படவுள்ளன.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் கௌதமனின் மகன் தமிழ் நடிக்கிறார். பிற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது என்று தெரிவித்தார்.