சேலம்: 1970, 80களில் வடசென்னையில் கொடிக்கட்டி பறந்த எளிய மக்களின் விளையாட்டான குத்துச்சண்டைதான் சார்பட்டா படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது. படத்தை பார்க்கும்போதே நம்மை கதைக்குள் இழுக்கும் விதமாக கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இந்தப் படத்தை ஒருபுறம் கொண்டாடினாலும், மீனவர்களை பா.இரஞ்சித் இருட்டடிப்பு செய்துவிட்டார் என ஒரு தரப்பினர் விமர்சித்தும்வருகின்றனர். திரைப்படங்கள் பெரும்பாலும் உண்மை கலந்த புனைவுகள் போலத்தான் இருக்கும்.
புனைவும், உண்மையும்!
சார்பட்டாவும் அதில் விதிவிலக்கல்ல. இந்தப் படத்தில் வரும் வசனங்களில் சில அக்காலக்கட்டத்தின் உண்மை நிலையை பறைசாற்றுவதாக இருந்தது. அப்படித்தான் ஆங்கிலோ - இந்தியன் பாக்ஸர் ஒருவரைப் பற்றி ஒரு வசனம் இடம்பெற்றிருக்கும்.
முழு நீள படத்தில் அந்தக் காட்சியும் வசனமும் ஒரு சிலருக்குத்தான் நினைவிருக்கும். பலரின் பாராட்டுகளுக்கு சொந்தக்காரராக சமூக வலைதளங்களில் புகழப்படும் மீனவரான பாக்ஸர் கித்தேரி முத்துவிடம் தோல்வியடைந்த பின், டெர்ரி ஏற்காட்டில்தான் வாழ்ந்து, மறைந்தார்.
பாக்ஸர் டெர்ரி
யார் அந்த டெர்ரி என அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் குளிர்காற்று ஏகத்துக்கும் வீச, ஒரு தூறல் வேளையில் ஏற்காடு சென்று, பாக்ஸர் டெர்ரி வீட்டை கண்டுபிடித்தோம்.
மான்போர்ட் பள்ளி பின்புறம் உள்ள தேவாலயம் அருகில் உள்ளது டெர்ரி கட்டிய அந்தக் கால இல்லம். அதற்கு அவர் வைத்துள்ள பெயர் ஃபாத்திமா ஹவுஸ்.
1946இல் ஏற்காடு வந்த அவர் இங்குள்ள மான்போர்ட் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியர், என்சிசி ஆசிரியர், குத்துச்சண்டை பயிற்சியாளர் என்று பன்முகங்களில் மாணவர்களின் சிந்தனை மற்றும் செயலில் கலந்துள்ளார் என்று நினைவுகூறும் ஏற்காடு வரலாற்று ஆய்வாளர் இளங்கோ, டெர்ரி கல்லறை குறித்தும் வியப்பாக நம்முடன் உரையாடினார்.
நத்தானியல் சைமன் டெர்ரி என்பதுதான், பாக்ஸர் டெர்ரியின் உண்மையான பெயர். சுருக்கமாக ’நாட் டெரி’ என அழைக்கப்பட்டார். இவரது தாய் - தந்தை மேற்கிந்திய தீவுகளில் இருக்கும் ஜமைக்கா நாட்டினை சேர்ந்தவர்கள். டெர்ரி 1913ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க வயல் பகுதியில் பிறந்தார்.
தென்னிந்திய குத்துச்சண்டை சாம்பியன்
சிறு வயதிலேயே தன்னுடைய தந்தையை இழந்த டெர்ரி, தன் எதிர்காலத்தை தன் விருப்பப்படியே செதுக்கியுள்ளார்.
டைகர் நாட் டெர்ரி என்ற பெயரில் குத்துச்சண்டையில் பங்கேற்ற இவருக்கு, பயந்து நடுங்காத பாக்ஸர்களே அப்போது இல்லை. யாராலும் தோற்கடிக்க முடியாத கான்போர்ட் ஜாக் என்ற பிரபல குத்துச்சண்டை வீரரையே வீழ்த்தி, தென்னிந்திய குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை பெற்றார்’என டெர்ரியின் வெற்றி கதைகளை பகிந்துகொண்டார் இளங்கோ.
சக வீரருக்காக வருந்திய டெர்ரி
தென்னிந்திய குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகுதான், சார்பட்டா பரம்பரையில் உள்ள வீரர் அருணாச்சலத்துடன் மோதியுள்ளார் டெர்ரி. அந்த மோதல்தான், டெர்ரி குத்துச்சண்டையில் இருந்து விலக பின்னாளில் காரணமாக இருந்ததாகப் பேச தொடங்கும் இளங்கோ, ”அருணாச்சலம் என்பவரோடு குத்துச்சண்டை போட்டியில் ஈடுபட்ட டெர்ரி, அவரை மேடையிலேயே அடித்து வீழ்த்தினார். பலத்த காயம் காரணமாக அவர் மேடையிலேயே உயிரிழந்தார்.
இரண்டு மாதங்களுக்கு பிறகு, நடைபெற்ற குத்துச்சண்டையில் கித்தேரி முத்துவிடம் தோல்வியடைந்தார் டெர்ரி. அதன் பின்னர் சுந்தரராஜன் என்பவரிடமும் தோல்வி அடைந்ததையடுத்து, குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்பதை நிறுத்திக்கொண்டார்” என டெர்ரி வீழ்ந்த கதையை பேசி முடித்தார். அதேபோல், பின்னாளில் அருணாச்சலம் மரணம் குறித்து டெர்ரி வருந்திக்கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: Exclusive Interview: சார்பட்டா கதை கேட்டதுமே ஷூட்டிங் போக துடிச்சேன் - நடிகர் ஆர்யா