ஹைதராபாத்: தெலுங்கு சினிமா ரசிகர்களால் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் பவன் கல்யாணுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராகவும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து ஹைதரபாத்திலுள்ள தனது பண்னை வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த மூன்றாம் தேதி திருப்பதி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் பங்கேற்றார் பவன் கல்யாண். இதைத்தொடர்ந்து அவர் கரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
அப்போது மருத்துவர்கள் அவரை சில நாள்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். அதன்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தபோது தீராத உடல்வலி ஏற்பட்டதன் காரணமாக மீண்டும் மருத்துவரை அணுகினார் பவன் கல்யாண்.
பின்னர் அவருக்கு மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது உறுதியானது.
அரசியல் பணிகளுக்கு இடையே திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் பவன் கல்யாண். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான வக்கீல் சாப் திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காக வக்கீல் சாப் வெளிவந்துள்ளது. இந்தப் படத்தில் பவன் கல்யாண், பிரகாஷ் ராஜ், அஞ்சலி, நிவேதா தாமஸ், அனன்யா நாகெல்லா ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிங்க் திரைப்படம் தமிழில், அஜித் நடித்து நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து தற்போது பவன் கல்யாண் நடித்து தெலுங்கில் வக்கீல் சாப் என்ற பெயரில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அறிகுறி இல்லாமலேயே கரோனா தொற்று உறுதி - டொவினோ தாமஸ்