மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'தலைவி'. இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் எம்ஜிஆராக அரவிந்த்சாமியும், கருணாநிதியாக பிரகாஷ் ராஜும் நடித்துள்ளனர். தலைவியின் முதல் பாக டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் இயக்குநர் குறித்து நெகிழ்ச்சியுடன் கங்கனா ட்வீட் செய்துள்ளார்.
அதில், "அன்புள்ள இயக்குநர் ஏ.எல். விஜய்யின் ’தலைவி’ படத்தின் முதல் பாகத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்துள்ளன. இன்னும் இரண்டாம் பாகத்தின் டப்பிங் பணிகள் மட்டுமே மிஞ்சியுள்ளன. உங்களை நான் எவ்வளவு மிஸ் செய்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.
உங்களுடன் நான் நெருக்கமாவதற்காக டீ, காபி, அசைவ உணவு போன்றவற்றைச் சாப்பிட அழைத்தேன். ஆனால் அதற்கு எல்லாம் நீங்கள் மறுத்துவிட்டீர்கள். பின்னர் மெதுவாகத் தான் எனக்குத் தெரிந்தது நீங்கள் ஒருபோதும் என்னிடமிருந்து தொலைவில் இல்லை என்று. நீங்கள் திறமையானவர்கள் மட்டுமல்ல, சிறந்தவர். எப்போதும் உங்கள் கண்கள் பிரகாசமாகப் பிரகாசிக்கும்.
உங்களைப் பற்றி மற்றவர்களிடம் நான் விசாரித்த வரை, நீங்கள் எப்போதும் மற்றவர்கள் மீது கோபமடைய மாட்டீர்கள் என்று கூறினார்கள். இந்த தருணத்தில் நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.