சென்னை: தமிழ்நாடு முழுவதும் சுப நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாக வட இந்திய கும்பல் மோசடி செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சுப நிகழ்ச்சிகளில் மலர் அலங்காரம், இருக்கைகள், ஒளி ஒலி அமைப்பு உள்ளிட்டவற்றை செய்யும் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். இவர்கள் அலங்காரங்கள் செய்வதற்கு தேவையான மூலப்பொருட்களை சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள கடைகளில் வாங்குவது வழக்கம்.
இந்த பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை குறிவைத்து திட்டம் தீட்டி பல லட்சம் மோசடி செய்துள்ளது ஒரு வடமாநில கும்பல். இணையம் வாயிலாகவும், முகநூல் வாயிலாகவும் இந்த தொழிலில் ஈடுபட்டிருப்போரை குறிவைக்கும் இந்த கும்பல், அலங்கார இருக்கைகள், விளக்குகள் உள்ளிட்டவற்றை மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்யவுள்ளதாக வலை விரிப்பர்.
பின்னர் அவற்றின் புகைப்படங்களை அனுப்பி ஒரு சிறிய தொகையை முன்பணமாக பெற்றுக்கொள்வர். சுப் என்டர்பிரைசஸ் என்கிற பெயரில் சனம் நதீம், அஸீம் கான் ஆகியோரது பெயர்களில் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலமாக பணம் அனுப்ப சொல்லி பெற்றுக்கொள்வர்.
இதனையடுத்து பதிவுசெய்த பொருட்களை பேக்கிங் செய்தது போலவும், கார்கோ, கொரியர் மூலமாக குறிப்பிட்ட முகவரிக்கு புக்கிங் செய்தது போலவும் புகைப்படங்கள் அனுப்பி மீதி தொகையையும் சுருட்டிவிடுவர். தொடர்ந்து அந்த எண்ணில் தொடர்பு கொண்டால் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும். இப்படி தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலசங்கம் சார்பில் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அந்த அமைப்பின் மாநில தலைவர் பிரவீன்தாஸ், இது தொடர்பாக மாநிலம் முழுவதும் ஏமாற்றப்பட்டோர் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தற்போது சிலர் மட்டுமே புகார் அளிக்க முன்வந்துள்ளனர் என்று கூறிய அவர், கரோனாவால் தொழில் நளிவடைந்துள்ள நிலையில், ஆசை காட்டி பெருமளவில் பணம் சுருட்டப்பட்டுள்ளது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மேலும் யாரும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கபட வேண்டும் என்றார்.