இண்டிகோ ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் ஒன்று சார்ஜாவிலிருந்து நேற்று (ஜனவரி 13) இரவு சென்னை விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை செய்தபோது, சென்னையைச் சேர்ந்த சையத் இப்ராகீம் கனி(27), சாகுல் ஹமீது(36) என்ற இருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டதில், உள்ளாடைகளுக்குள் தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், அவர்கள் கொண்டுவந்த அட்டைப் பெட்டியை பரிசோதனை செய்தபோது, ஐ போன்கள், மடிக்கணினி, சிகரெட் பார்சல்கள், மது பாட்டில்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ரூ. 85 லட்சம் மதிப்பிலான 1.42 கிலோ தங்கம், ஐ போன், மதுபாட்டில்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அலுவலர்கள், சையத் இப்ராகீம் கனி, சாகுல் ஹமீது ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
