விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜலிங்கம். இவர் புதிய தமிழகம் கட்சியில் மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்தபோது, ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருபிரிவினரிடையே கட்சிக் கொடியேற்றும் நிகழ்வில் மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் தங்கவேல் என்பவர் கொலைசெய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி இவரும் கைதுசெய்யப்பட்டார். இதனால், ராஜலிங்கம் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இன்று (செப்.12) தனது நிலத்தில் வேளாண்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் அவரது தலை, முகப்பகுதியில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து முதுகுடி மக்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைக் கைதுசெய்ய வலியுறுத்தி ராஜபாளையம்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.
இதையும் படிங்க: தண்ணீர் லாரி மோதி சிறுவன் பலி: சிசிடிவி வெளியீடு