ஆப்கானிஸ்தானில் நீண்டகாலமாக (18 ஆண்டுகள்) நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவும், தலிபான் பயங்கரவாத அமைப்பும் கடந்த பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி ஆப்கான் அமைதி ஒப்பத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த அமைதி ஒப்பந்தத்தில், ஆப்கானிஸ்தான் அரசு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஐந்தாயிரம் தலிபான் கைதிகளை விடுவிக்கவும், பதிலுக்கு தலிபான்கள் ஆயிரம் சிறைவாசிகளை விடுவிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், ஆப்கான் அமைதி ஒப்பந்தத்தில் சொன்னபடி 20 கைதிகளை தாங்கள் விடுவித்துள்ளதாக தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சைப்புல்லா முஜாஹிதீன் கூறுகையில், "லகான்தான் மாகாணத்தைச் சேர்ந்த அரசுப்படை, காவல்துறையினர் என 20 கைதிகள் மிடாலம் பகுதியில் உள்ள சுல்தான் காஸி பாபா வாசலில் வியாழனன்று விடுவிக்கப்பட்டனர்" என்றார்.
ஒப்பந்தத்தின் படி ஆப்கானிஸ்தான் அரசு இதுவரை 600 தலிபான்களை விடுவித்துள்ளது.
கைதிகள் பரிமாற்றத்துக்குப் பின்னரே ஆப்கானிஸ்தான், தலிபான்களுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : போஸ்னியா தேவாலயத்தில் அலட்சியமாக நடைபெற்ற புனித சடங்கு