அமெரிக்க பங்குச்சந்தை குறியீட்டு எண் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து உயர்ந்துவருகிறது. குறிப்பாக, அமெரிக்காவின் டாப் 30 நிறுவனங்களை உள்ளடக்கிய டவ் குறியீட்டு எண் 1987ஆம் ஆண்டிற்குப் பின், நவம்பர் மாதம் மிகப்பெரிய அளவிற்கு ஏற்றம் கண்டுள்ளது.
இந்த நவம்பர் மாதம் டவ் குறியீட்டு எண் 11.9 விழுக்காடு உயர்ந்துள்ளது. 1987ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டவ் குறியீட்டு எண் 13.8 விழுக்காடு உயர்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல அமெரிக்காவின் டாப் 500 நிறுவனங்களின் பங்கு மதிப்பை உள்ளடக்கிய எஸ் & பி குறியீட்டு எண் இம்மாதம் 10.8 விழுக்காடு உயர்ந்துள்ளது.
அமெரிக்க டெக் நிறுவனங்களான பேஸ்புக், ஆப்பிள், அமேசான், நெட்ஃபிக்ஸ், கூகுள் உள்ளிட்டவற்றைக் கொண்ட நாஸ்டாக் நவம்பர் மாதத்தில் 11.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. கரோனா தடுப்பு மருந்துகளின் செயல்திறன் குறித்து தொடர்ந்து நேர்மறையான செய்திகள் வருவதே இந்த உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது.
முன்னதாக அமெரிக்க சுகாதாரத் துறைச் செயலர் அலெக்ஸ் அசார் சிபிஎஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "அனைத்துமே சரியாக நடந்தால், அமெரிக்கர்களுக்கு கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பே கரோனா தடுப்பு மருந்தை அளிக்க முடியும். இது எதிர்பார்த்ததைவிட முன்கூட்டியே நடக்கும்" என்றார்.
முன்னதாக, ஃபைஸர் நிறுவனத்துடன் மாடர்னா நிறுவனமும் கரோனா தடுப்பு மருந்திற்கு அவரச அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.
இதையும் படிங்க: அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய வங்கிகளின் மூலதனம் சரியும்!