திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த கடைக்கு இரவு காவலாளியாக பெருவளநல்லூர் வடக்கு தெருவைச் சேர்ந்த தங்கையன் மகன் நந்திராஜ் என்ற பாலையா(55) பணியாற்றி வந்தார். கடந்த 20ஆம் தேதி இரவு வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்த பாலையா, மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக் கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் மூன்று தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், கொலையாளிகளை தேடி வந்ந தனிப்படையினர், சிறுகனூர் அருகே நெடுங்கூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன் (22), சந்துரு (18), சவுந்தரராஜன் (18) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இதில் மதுபாட்டில்களை திருடியபோது, பாலையா தடுத்ததால், அடித்துக் கொலை செய்ததாக கைதான மூன்று பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து பல்வேறு திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.