தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 27 , 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தமுள்ள 4,077 பதவிகளில் 626 பதவிகளுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மீதமுள்ள 3,451 பதவிகளுக்கு 11,870 பேர் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே, அதிமுக, அதன் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் குமார், அமைப்பு செயலர் பரஞ்சோதி, அதிமுக நிர்வாகிகள், தோழமை கட்சிகளான தேமுதிக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் 18ஆவது வார்டு தாமரை சிவசக்திவேல், 1 முதல் 6ஆவது வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களையும் ஆதரித்து, அதவத்தூர், அல்லித்துறை, சோமரசன்பேட்டை, இனியானூர், நாச்சிக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வாக்கு சேகரிப்பின்போது பேசிய அமைச்சர் வளர்மதி , ’மக்களுக்கு எந்த நல்ல திட்டங்களும் கிடைக்கவிடாமல் செய்ய எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாடும் இயக்கம் திமுக. தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருப்பது போல திருச்சியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் தண்ணீர் மிகை மாவட்டமாக திருச்சி உள்ளது’ என்றார்.
இதையும் படிங்க: 'வன்முறையைத் தூண்டும் உதயநிதி ஸ்டாலின்...!'