திருப்பூர்: நொச்சி பாளையம் பிரிவு என்னும் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் டாஸ்மாக் அருகில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு (நவ.12) 10 மணியளவில் மது போதையில் வந்த நபர் ஒருவர் 500 ரூபாய் கொடுத்து பெட்டிக்கடையில் சிகரெட் கேட்டுள்ளார்.
அதற்கு கடையில் வேலை செய்பவர் சில்லறை இல்லை எனக் கூறியுள்ளார். இதையடுத்து அந்த போதை ஆசாமி 500 ரூபாய்க்கு 10 பாக்கெட் சிகரெட் கொடு எனக் கேட்டு கடைக்காரரிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டார். பின்னர், செந்தில்குமார் கடையை பூட்டிவிட்டு போதை ஆசாமியை பேசி விரட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
கடைக்கு தீ வைப்பு
இதனால், ஆத்திரத்தில் இருந்த அந்நபர் அங்கிருந்து செல்லாமல், பூட்டிய கடைக்கு வெளியே அமர்ந்து சிகரெட் பிடித்துள்ளார். பின்னர், அவரது வாகனத்தில் இருந்த பெட்ரோலை பிடித்து கடையின் ஷட்டரில் ஊற்றி தீ வைத்து விட்டு, அங்கிருந்துச் சென்றுள்ளார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து செந்தில்குமாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த செந்தில்குமார் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடையில் மது வாங்குவதில் தகராறு; இளைஞர் கொடூர கொலை