தமிழகத்தில் இரண்டாவது கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று, தனி விமானத்தில் தூத்துக்குடி வந்தார். பின்னர் கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட அவர், வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், “நாட்டின் முக்கிய அமைப்புகளை திட்டமிட்டு தாக்குதல் நடத்தி சீர்குலைத்து அழித்து வருகின்றனர். எம்.எல்.ஏக்களை கட்சித்தாவ சொல்லி மிரட்டல் நடக்கிறது. மறுத்தால் மிகமோசமான நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இப்படியான மோசமான சூழலில் தான் இருக்கிறோம். இதற்கெல்லாம் நீதி வழங்க மக்களால்தான் முடியும்” என்றார்.
இதையடுத்து தூத்துக்குடி நகரின் மையப்பகுதியான குரூஸ் பர்னாந்து சிலை முன்பு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய ராகுல் காந்திக்கு, பாரம்பரிய வாத்தியங்கள் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர்களிடையே பேசிய ராகுல், “நமது நாடு பல்வேறு கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், மொழியையும் கொண்டது. ஆனால் மத்திய அரசு தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், மொழியையும், மக்களையும், சட்டத்தையும் மதிப்பதில்லை.
இங்குள்ள அதிமுக அரசோ மத்திய அரசின் அடிமை அரசாக செயல்படுகிறது. தொலைக்காட்சியை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குவதை போல், தமிழக அரசை மோடி இயக்குகிறார். வர இருக்கும் தேர்தலின் மூலம், அந்த ரிமோட் கண்ட்ரோலில் உள்ள பேட்டரியை எடுக்கப் போகிறோம். ஆகவே மக்கள் ஒன்று திரள தயாராகுங்கள்” என்றார்.
இதையடுத்து கோவங்காடு உப்பளத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, சாத்தான்குளத்தில் பிராசாரத்தை முடித்துக்கொண்டு நாங்குநேரிக்கு புறப்பட்டுச் சென்றார். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் ராகுல் காந்தி இம்முறை பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு தேர்தலும்... கட்சிகளின் பயணமும்