மதுரை: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் சி.சே. ராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
"கரோனா தொற்று காரணமாக மாணவர்களின் உடல்நலன் கருதி நடப்புக் கல்வியாண்டில் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்துசெய்யப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். ஆனால், நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் குறித்து அவர் எந்த அறிவிப்பும் செய்யவில்லை.
கூடுதல் தேர்வு மையம்
சிபிஎஸ்இ தேர்வை ரத்துசெய்யும் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு, உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கையை எந்த முறையில் நடத்த வேண்டும் என்பதை மாநில அரசுகளுடன் ஒன்றிய அரசு கலந்தாலோசித்திருக்க வேண்டும்.
ஆனால் ஒன்றிய அரசு அதனைச் செய்யவில்லை. கடந்த ஆண்டில் ஊரடங்கு நாள்களில்கூட ஒன்றிய அரசால் நீட் தேர்வினை நடத்த முடிந்தது. அப்படி இருக்கையில், 12ஆம் வகுப்புத் தேர்வினையும் ஒன்றிய அரசால் நடத்தியிருக்க முடியும்.
கரோனா தொற்று இரண்டாம் அலை தற்போது தமிழ்நாடு அரசின் முயற்சியால் கட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் இந்நேரத்தில் தேவையான கால இடைவெளிவிட்டு, மாணவர்களின் உடல்நலம், மனநலம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, பொதுத்தேர்வு நேரம் குறைப்பு, விரிவான விடையளிக்கும் முறைக்குப் பதிலாக 'கொள் குறி' வினாக்கள் (Policy Questions) வகையிலான தேர்வை நடத்தலாம்.
கேள்வித்தாளை அனைத்து மாணவர்களின் கற்றல் திறனை அடிப்படையாகக் கொண்டு மிக எளிமையாகத் தயார்செய்து கூடுதல் தேர்வு மையங்களை ஒதுக்கி 12ஆம் வகுப்புத் தேர்வுகளை நடத்த வேண்டும்.
அரங்கேறும் ஆன்லைன் தேர்வுகள்
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக 2020- 2021ஆம் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ஏதும் நடத்தப்படவில்லை. ஆன்லைன் வழியில் மட்டுமே பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இதனால், மாணவர்களின் நலன்கருதி, தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தவிர மற்ற 1 முதல் 11ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வின்றித் தேர்ச்சி பெறுவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
ஆனால் சில தனியார் பள்ளிகள் உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண்கள் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், ஆன்லைன் மூலம் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தி அதன்மூலம் கிடைக்கும் மதிப்பெண்களின் அடிப்படையிலும், தேர்ச்சி வழங்குவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
முடிவில் உறுதி வேண்டும்
இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு எனத் தமிழ்நாடு கல்வி அமைச்சர்கள் ஏற்கெனவே அண்மையில் ஒன்றிய அமைச்சர்கள் உடனான கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்கள். அதில் அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கை பொதுத்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும்.
ஊரடங்கைப் பயன்படுத்தும் ஒன்றிய அரசு
ஒன்றிய அரசு தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசுகளின் எதிர்ப்பையும் மீறி அனைத்து மாநிலங்களிலும் புகுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
இனிமேல் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி உள்பட அனைத்துப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வை நடத்துவதற்காகத்தான் இந்தக் கரோனா சூழலை மிகச் சாதுரியமாக உள்நோக்கத்துடன் பயன்படுத்துகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
தனி கல்விக்கொள்கை
எனவே தமிழ்நாடு அரசு பொதுத்தேர்வினை உறுதியாக நடத்துவதே மாணவர்களின் எதிர்காலத்திற்கு உகந்ததாக இருக்கும். திமுக ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதுபோல் அரசியலமைப்புச் சட்டத்தில் பொதுப்பட்டியலில் உள்ள கல்வித் துறையை மீண்டும் மாநிலப் பட்டியலில் இடம்பெறச் செய்திட, மாநிலங்களுக்கே கல்வி அதிகாரத்தைத் திரும்பப் பெறுவதற்கான தொடக்கப் புள்ளியாக இது அமையும்.
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிற்கு என்று தனி கல்விக்கொள்கையை உருவாக்க வேண்டியதும் மிக அவசியம்.
ஒன்றிய அரசானது நீட் தேர்வை அறிமுகப்படுத்தித் தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பினைத் தட்டிப் பறிக்கிறது.
புதிய ஆட்சி அமைந்த உடன் நீட் தேர்வை ரத்துசெய்யும் சட்டத்தை நிறைவேற்றுவோம் எனத் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியினை அரசு நிறைவேற்றுவதற்கும் இதுவே சரியான தருணமாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடம் நாளை கருத்துக் கேட்பு