பாகிஸ்தானுடன் தொடர்புடையவர் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனால் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கறிஞர் காயத்ரி மதுரையிலுள்ள மக்கள் கண்காணிப்பக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் எந்தப் போராட்டத்திற்கும் சென்னை காவல் ஆணையர் அனுமதியளிப்பதில்லை. இதன் காரணமாகவே நாங்கள் கோலமிடும் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியதாயிற்று.
கொட்டாச்சி, கோலமாவு ஆகியவற்றைத்தான் கொண்டு செல்வதாக முடிவெடுத்திருந்தோம். 29ஆம் தேதி காலை 7.10 மணிக்கு பெசன்ட் நகர் பேருந்து பணிமனை அருகில்தான் அனைவரும் சந்தித்தோம். அச்சமயம் அங்கு காவல் துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
அங்கு ஓரிடத்தில் கோலமிட முயன்றபோது காவல் துறையினர், பொது இடம் என்று கூறி தடுத்தனர். பிறகு அருகிலுள்ள சந்துக்குள் சென்று வீடுகளுக்கு முன்பாக கோலமிட்டோம். எந்தச் சட்டத்தின்கீழ் நாங்கள் கைதுசெய்யப்பட்டோம் என்பதை கடைசிவரை காவல் துறையினர் விளக்கவேயில்லை.
புகார் கொடுத்ததாகக் சொல்லும் நபரின் பெயரை பாதுகாப்புக் கருதி வெளியிட மறுத்ததாகச் சொல்லும் காவல் துறை, என்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களை பொதுவெளியில் வெளியிட்டது ஏன்? எனது தனிப்பட்ட பாதுகாப்புக்கு சென்னை காவல் துறை ஆணையர் பொறுப்பேற்க வேண்டும்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், மியான்மர், மாலத்தீவு, இந்தியா, இந்தோனேசியா, வியட்நாம், இலங்கை, மலேசியா ஆகிய ஒன்பது நாடுகளில் தனிநபர் மத உரிமை எவ்வாறு சீர்குலைக்கப்படுகிறது என்பது குறித்து நான் பதிவுசெய்துள்ளேன்.
மேற்கண்ட நாடுகளில் மதச் சிறுபான்மையினரும் நாத்திகர்களும் எவ்வாறு துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பது குறித்தே அதில் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளேன்" என்றார்.