மதுரை பீ.பீ.குளம்-முல்லை நகர் குடியிருப்போர் சங்க செயலாளர் பாண்டிராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், 'பீ.பீ.குளம்-நேதாஜி பிரதான சாலையோரமாக சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். குறிப்பாக பீ.பீ.குளம் கண்மாய் கரையில் வீடுகள் கட்டி 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசிக்கின்றனர்.
அவர்கள் அனைவரும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள். அவர்கள் பட்டா கோரி பல ஆண்டுகளாக அலுவலர்களிடம் மனு அளித்தும் இதுவரை வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் எந்த முன் அறிவிப்பும் இன்றி, பீ.பீ.குளம் கண்மாய் பகுதியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மக்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஆக்கிரமிப்பு பகுதியிலுள்ள கட்சி அலுவலகம், வணிக நோக்கில் செயல்படும் கட்டடங்கள், வழிபாட்டுத் தலங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றை இடிக்க வேண்டும்.
வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளை ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, குடிசை மாற்று வாரியம் ஆகிய மூன்று துறைகளை உள்ளடக்கிய குழு அமைக்க வேண்டும்.
இந்தக்குழுவினர் ஆக்கிரமிப்பு பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களைக் கணக்கெடுப்பு செய்து, எத்தனை ஆண்டுகளாக வசித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கட்டுமான முறைகேடு வழக்கில் நகராட்சி நிர்வாக ஆணையர் பதிலளிக்க உத்தரவு!