ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் சாயப்பட்டறை, சலவை தொழிற்சாலை உள்ளிட்ட அனைத்து வகையான தொழிற்சாலைகளிலும் கொதிகலன்களுக்கான அனுமதி பெறுவதற்கு, முதுநிலை கொதிகலன்கள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் அதிகளவில் லஞ்சம் கேட்டுத் தொந்தரவு செய்யப்படுவதாக, மாவட்ட லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன.
இந்தப் புகார்களின் அடிப்படையில், மாவட்ட லஞ்ச ஒழிப்புக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் கருவூலக அலுவலகத்தில் செயல்பட்டு வரும் முதுநிலை கொதிகலன்கள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் இன்று(அக்.13) மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அங்குள்ள உதவி இயக்குநர் மகேஷ் பாண்டியின் அறையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய தீவிர சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து, மகேஷ் பாண்டியை லஞ்ச ஒழிப்புக் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்த பின், அவர் மீதான நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று லஞ்ச ஒழிப்புக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : தேனியில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் அவமதிக்கப்படுவதாக புகார்!