ரயில்வேத் துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, கோவை கூட்ஸ் செட் சாலையில் உள்ள ரயில்வே பணிமனை அலுவலகத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஆர்.எம்.யூ பொதுச்செயலாளர் கண்ணையா, ”லாபகரமாக இயங்கும் ரயில்களை தனியாருக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாகத் தென்னக ரயில்வேயில் சென்னை - மதுரை எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை - கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களைத் தனியாருக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ரயில்களை தனியாருக்குக் கொடுத்தால் ரயில் டிக்கெட்களின் விலை உயரும். 10 ரூபாய் பிளாட்பாரம் டிக்கெட் நூறு ரூபாயாக உயரும். இதனால் நடுத்தர, ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்” என்றார்.
மேலும், தென்னக ரயில்வேயில் 30 ரயில் நிலையங்களை மத்திய அரசு தனியாருக்கு ஒப்படைக்க உள்ளதையும் ரயில்வே துறையினை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.