கோவை: கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா நேற்று (டிசம்பர் 2) செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவையில் கரோனா தாக்கம் குறைந்துள்ளது.
இருப்பினும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒமைக்ரான் என்னும் புதிய வகை தொற்று வேறு நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது. அது வேகமாகப் பரவக்கூடிய தன்மையுள்ள வைரஸ் எனக் கூறப்படுகிறது.
தற்போது கரோனாவிற்குச் செலுத்தப்படும் தடுப்பூசி எந்த அளவிற்குப் பாதுகாப்பு என்பது இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க அது முக்கியப் பங்காற்றுகிறது.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்குத்தான் அதிக பாதிப்பு, இறப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு கோவையில் இல்லை, எனவே மக்கள் அச்சப்பட வேண்டாம்.
இருப்பினும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். டெல்டா வகை தொற்று மூலம் இந்த ஒமைக்ரான் மாற்றமடைந்துள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். கோவை அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் பரிசோதனைக்குத் தேவையான வசதிகள் உள்ளன.
அந்தப் பரிசோதனையில் அறிகுறி கண்டறிந்தால், சென்னையிலுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி உறுதிசெய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோவையில் தற்போது ஐந்தாயிரம் பரிசோதனை உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மதுரை மிகவும் பின் தங்கியே உள்ளது - மா.சுப்பிரமணியன் கவலை