கோவை தெற்கு தொகுதியில், அதிமுக கூட்டணியில் பாஜகவின் வானதி சீனிவாசனும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமாரும் களத்தில் உள்ளனர். மேலும், சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களமிறங்கியுள்ள மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசனும், இத்தொகுதியில் தான் போட்டியிடுகிறார். இதனால் இத்தொகுதிக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது.
பிரச்சாரக் களம் ஏற்கனவே சூடு பிடித்துள்ள நிலையில், கமல் ஹாசனும் அங்கேயே தங்கி பிரச்சாரத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, இன்று காலை பூ மார்க்கெட் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டவாறு பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டிருந்தார். அப்போது பலர் கமலுடன் பேசவும், செல்ஃபி எடுத்துக் கொள்ளவும் கூடினர். அப்போது ஆர்வ மிகுதியில் கூட்டத்திலிருந்த சிலர் கமலின் காலை மிதித்து விட்டனர். இதனால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அண்மையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காலிலேயே மீண்டும் அடிபட்டதால், உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற கமல் அங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார். காலில் வீக்கம் இருப்பதால் ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து, இன்றைய பிரச்சாரத் திட்டங்களை அனைத்தையும் கமல் ரத்து செய்தார்.
இதனிடையே பிரச்சாரக் களத்தில் எதிர் எதிரே களம் காணும், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், கமல் ஹாசன் விரைவில் குணம் பெற்று மீண்டு வர, வாழ்த்து கடிதத்துடன் பழக்கூடை ஒன்றை பாஜகவின் மாவட்டத் தலைவர் நந்தகுமாரிடம் கொடுத்து அனுப்பினார். இதனை மநீம மாநிலச் செயலாளர் மூர்த்தி பெற்றுக் கொண்டார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி இந்தியாவின் ஏஜெண்டு...மோடி உலகத்தின் ஏஜெண்டு: சீமான்!