நாட்டின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையம். இங்கு தற்போது ஒரு மணி நேரத்தில் 36 விமானங்கள் வரை கையாளப்பட்டு வருகின்றன.
ஆனால், விமான நிலையத்தில் ஒரு விமானம் தரையிறங்கும்போதோ அல்லது புறப்படும்போதோ மற்றொரு விமானம் ஓடுபாதையை அடைவதில் இங்கு சிக்கல் நிலவி வந்தது. இதனால் விமானங்கள் காலதாமதமின்றி விரைவாக நடைமேடைக்குச் செல்ல 'ராபிட் எக்ஸிட் டாக்சி வே' எனப்படும் விரைவுப் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ஓடுபாதையிலிருந்து நடைமேடைக்குச் செல்ல புதிய விரைவுப் பாதை 44 மீட்டர் அகலத்திலும் 365 மீட்டர் நீளத்திலும் அமைக்கப்பட்டது. இந்த விரைவுப் பாதையில், விமானங்கள் 30 டிகிரியில் திரும்ப முடியும். முன்னதாக இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பாதைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் மூலம், குறிப்பிட்ட நேரத்தில் அதிக விமானங்கள் தரையிறங்க முடியும். தற்போது, ஒரு மணி நேரத்திற்கு 36 விமானங்கள் கையாளப்படும் நிலையில், இந்த விரைவுப் பாதை மூலம் ஒரு மணி நேரத்திற்கு 42 விமானங்கள் வரை இயக்க முடியும்.
இந்த விரைவுப் பாதையை நேற்று (ஆக. 22) சென்னை விமான நிலைய இயக்குனர் சுனில் தத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அப்பாதையில் தரையிறங்கிய கத்தார் விமானத்திற்கு இருபக்கமும் தீயணைப்பு வாகனங்கள் மூலம் நீர்ப் பாய்ச்சி, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா பரிசோதனையை ஆன்லைனில் அறிய வசதி -அமைச்சர் விஜயபாஸ்கர்