சென்னை: சென்னை கொளத்தூர் லக்ஷ்மிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பினு (55). A+ சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர் மீது, 4 கொலை வழக்கு, கொலை முயற்சி, கொள்ளை, ஆயுத தடைச்சட்டம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ரவுடி பினு, கடந்த 2018-ம் ஆண்டு மாங்காடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளை ஒரே இடத்தில் கூட்டி, அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து 2018-ம் ஆண்டு, 2019-ம் ஆண்டு என இரு முறை போலீசாரால் கைது செய்யப்பட்ட ரவுடி பினு, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தபின் காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல் 2 ஆண்டுகளுக்கும் மேல் தலைமறைவானார்.
தலைமறைவு வாழ்க்கை முதல் சிறைவாழ்க்கை வரை: இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் சூளைமேடு பகுதியில் மாமூல் வசூலில் ரவுடி பினு ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சூளைமேடு தனிப்படை போலீசார் அவரை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். அப்போதும் நிபந்தனை ஜாமீனில் வெளியேறி தலைமறைவாக இருந்து வந்த ரவுடி பினுவை போலீசார் தேடி வந்த நிலையில், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த செல்போனை கொண்டு வந்து கொடுத்த டெலிவரி பாயிடம், மிரட்டி செல்போனை பறித்து தாக்கிவிட்டு துரத்தி அடித்ததாக ரவுடி பினு மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்றிரவு 7 மணியளவில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ரவுடி பினு சரணடைந்தார்.
குற்றவாளியாக இருந்தாலும் நோயாளி: தேனாம்பேட்டை காவல் நிலையத்திலும் ரவுடி பினு மீது குற்றச்செயல் புரிதல், பயங்கர ஆயுதங்களைக்கொண்டு தாக்குதல், கொள்ளை உள்ளிட்ட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனைத்தொடர்ந்து சரணடைந்த ரவுடி பினுவை போலீசார் சைதாப்பேட்டை 18-வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் கிருஷ்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது ரவுடி பினு தான் இதய நோய் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருவதால், தன்னை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்குமாறு கோரிக்கை வைத்தார்.
அந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிமன்ற நடுவர் கிருஷ்ணன், ரவுடி பினுவுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நேற்று(15-4-2022) இரவு 11 மணி அளவில் ரவுடி பினுவை போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு போலீசார் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: குண்டர்களை ஏவி தாக்கிய பாஜக நிர்வாகி - காவல் துறையிடம் புகார்