காலை முதல் மக்கள் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சாலிகிராமத்தில் அமைந்துள்ள காவேரி உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் நட்சத்திரங்களும், பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் வாக்குச்சாவடியில் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்தப் பரபரப்பான சூழலில் பிற்பகல் 12 மணியளவில் நந்தினி என்பவர் வாக்களிக்க வந்திருந்தார். அப்போது வாக்காளர் பதிவேட்டில் தனது பெயர் இல்லை எனப் புகார் தெரிவித்தார். இவரைத் தொடர்ந்து சுமார் 15க்கும் மேற்பட்டோர் தங்களுடைய பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இல்லை எனவும் இதனால் எங்களுக்கு ஓட்டு போட முடியாத நிலை நீடிப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து நிருபர்களிடம் ஆவேசமடைந்த நந்தினி கூறும்போது, தேர்தலுக்கு முன்பு இரண்டு முறை முகாம்களில் வாக்காளர் படிவம் சரி பார்க்கப்பட்டதாகவும், அப்போது பெயரில் பிழை இருந்ததால் பிழையை சரி பார்த்ததாகவும் கூறினார். வாக்களிக்கும் நாளான இன்று வாக்குச்சாவடியில் அவருடைய பெயர் இல்லாதது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். இதுவரை மூன்று முறை வாக்களித்திருப்பதாகவும், இன்று வாக்களிக்க முடியாமல் போனது பெரும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது எனவும் கூறினார்.
பின்னர் இதுகுறித்து உரிய தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்து 49(A) படிவம் வேண்டுமென கேட்டபோது அவர் அது குறித்து விளக்கம் அளிக்காமல் அங்கிருந்து அவரை அப்புறப்படுத்தப் பார்ப்பதாகவும் குற்றம் சாட்டினார். இந்த மாதிரியான பதில் அதிகாரியின் அலட்சியப்போக்கு எனவும், மேலும் வாக்குச்சாவடி கண்கணிப்பாளரிடம் மீண்டும் கேட்ட போது அதற்கு அவர் தானே 7 முறை ஓட்டு போடாத அவல நிலையில் உள்ளதாகவும் உங்களுக்கு ஓட்டு இல்லை என்றால் என்ன எனவும் கேலியாகக் கூறினார் எனப் புகார் தெரிவித்தார்.