சென்னை: ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அதிமுக தேர்தல் பரப்புரைப் பணிகளை தொடங்கி வைக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், “தமிழ்நாட்டின் அரசியல் நேற்றும், இன்றும், நாளையும் எம்.ஜி ஆர்-யை மையப்படுத்தியே இருக்கும். அதிமுகவின் தொண்டனாக எப்போதும் உழைக்க சபதம் ஏற்கிறேன். அதிமுகவில் தொண்டனாக இருப்பதே பெருமையாக கருதுகிறேன்.
தமிழ்நாட்டிற்கு திமுக நல்ல திட்டங்கள் தந்த வரலாறு இல்லை. மத்திய அரசில் அங்கம் வகித்தப்போது திமுக தலைவர் ஸ்டாலின் மாநிலத்திற்கு கொண்டு வந்த நீண்டகாலத் திட்டங்களை பட்டியலிட முடியுமா?
தமிழ்நாட்டிலுள்ள 11 லட்சம் ஏழைக் குடும்பங்கள் வீடில்லாமல் இருப்பதைக் கணக்கெடுத்துள்ளோம். அவர்களுக்கு பல்வேறு திட்டங்களின் மூலம் 6 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மற்றவர்கள் அனைவருக்கும் 2023ஆம் ஆண்டிற்குள் வீடுகள் கட்டித்தரப்படும்.
நம் மாநிலத்திற்கு பல்வேறு நலத் திட்டங்களை மத்திய அரசு செய்து தருவதால், அவர்களை ஆதரிக்கிறோம். மத்திய அரசில், அதிமுக அங்கம் வகிக்காதபோதும் பல்வேறு நலத்திட்டங்களை பெற்று தந்துள்ளோம். மத்தியில் உள்ள ஆட்சியில் நாங்கள் அங்கம் வகிக்கவில்லை. மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால்தான் தமிழ்நாட்டிற்கு எய்ம்ஸ் வந்து சேர்ந்திருக்கிறது.
காங்கிரஸ் கூட்டணியுடன் இருந்த திமுக, 16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்தீர்கள். எதாவது ஒரு உருப்படியான திட்டத்தை மாநிலத்திற்கு கொண்டு வந்து சேர்த்தீர்களா?. பதவி சுகத்தை மட்டும் அனுபவித்துக் கொண்டு. தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமை பறிபோகும்போது தடுத்து நிறுத்தாத, கையாலாகாத ஆட்சியாக இருந்தால் மக்கள் ஏற்பார்களா?.
காவேரி பிரச்னையிலும், முல்லை பெரியாறு பிரச்னையிலும் அதிமுகதான் வெற்றி பெற்றுள்ளது. காவேரி பிரச்னையில் காவேரி முறைப்படுத்தும் குழு, ஒழுங்காற்று ஆணையம் ஆகியவற்றையும் அதிமுகதான் அமைத்தது. ஜீவாதார உரிமைகளை பெற்று தரும் கட்சி அதிமுகதான்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் முதலில் கையெழுத்திட்ட திமுகதான். தற்போது அதைவைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பழனிசாமி.
உலகளவில் கரோனா பாதிப்பு அதிகளவில் இருந்தாலும், பாதிப்பு ஏற்படாத மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது. அதற்கு காரணம் அரசு எடுத்த நடவடிக்கைதான். திமுகவும், அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசும் இலங்கையில் போர் ஏற்பட்டபோது, கண்டுகொள்ளாமல் இருந்ததால், தமிழர்கள் கொல்லப்பட்டனர். பலர் கை, கால்களை இழந்தனர். இதனை கூட்டணியில் இருந்த திமுக நினைத்திருந்தால் தடுத்து நிறுத்தியிருக்கலாம்.
அதிமுக அரசின் சாதனைகளை வீடுவீடாகச் சென்று நினைவுப்படுத்துங்கள். திமுக ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட துன்பத்தையும் மக்களிடம் எடுத்துக்கூறுங்கள். நல்லரசு என்றால் அது அதிமுகதான். அதிமுகவிற்கு இருக்கும் நற்பெயரை வாக்குகளாக சேகரிக்கும் பங்கு ஒவ்வொரு தொண்டர்களுக்கும் உண்டு. 2021ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி அமைக்கும்; சென்று வாருங்கள்; வென்று வாருங்கள் உடன்பிறப்புகளே” என தனது உரையை நிறைவுசெய்தார்.