தமிழ்நாடு சட்டபேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, திமுக உறுப்பினர் பிச்சாண்டி, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் பிரச்னை குறித்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது, மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படுவதால், விஷ வாயு தாக்குதலுக்கு ஆளாகி மரணமடையும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, சமுதாயத்தில் பின்தங்கிய மக்கள் இந்த பணிகளில் ஈடுபடும்போது மரணம் அடைகின்றனர் என தெரிவித்தார். மேலும் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என கேள்வி எழுப்பினார். மேலும், கேரளாவில் இந்த பணிகளுக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும், அதுபோன்று இயந்திரங்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதற்கு, நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. மீறினால் சிறை தண்டனை வழங்கவும் சட்டத்தில் இடம் இருக்கிறது. அரசை பொறுத்தவரை, இந்த பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவது கிடையாது எனவும், ஆனால் தனியார் நிறுவனம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் மனிதர்களை பயன்படுத்துவதால், அவ்வப்போது சில சம்பவங்கள் நடந்து விடுகின்றன என தெரிவித்தார். விஷ வாயு தாக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் கேரளாவுக்கு முன்பே, மனிதக் கழிவுகளை அகற்றும் பணிக்கு, நாம் இயந்திரங்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம் எனவும், 577 இயந்திரங்கள் அரசு வசம் இருக்கின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார். தனியார் நிறுவனம், விழிப்புணர்வு இல்லாமல் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில், மனிதர்களை ஈடுபடுத்துகின்றனர். அவ்வாறு செயல்படுவர்கள் மீது சிறை தண்டனை விதிக்கவும் சட்டத்தில் இடம் இருக்கிறது என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.