தமிழ்நாட்டில் ஏப்ரல் 28 ஆம் தேதி முதல், 41 ஆய்வகங்களின் மூலம் ஒரு நாளைக்கு 7,093 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், மே மாதம் 7 ஆம் தேதி முதல் 52 ஆய்வகங்களின் மூலம் ஒரு நாளைக்கு 14,195 பேருக்கு நோய் கண்டறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகளவில் தெரிய வருகிறது.
கோயம்பேடு காய்கறி மற்றும் மலர் விற்பனை வளாகம் ஆசியாவின் மிகப்பெரிய சந்தை ஆகும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு எனப் பெரும்பாலான மாவட்டங்களுக்கு முக்கியமான சந்தையாக கோயம்பேடு சந்தையே இருந்து வருகிறது. மேலும், அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும் காய்கறிகள் இங்கு அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கரோனா தொற்று துவங்கியதிலிருந்து மக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலும், கோயம்பேடு சந்தை மூடப்படவில்லை. சந்தையை மூடிவிட்டால் காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் தொடர்ந்து இயங்கி வந்தது.
ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி முதல் 4 நாட்கள் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இதனால் ஏப்ரல் 25 ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் அச்சந்தைக்குச் சென்று திரும்பினர். அன்றுதான் அதற்கான அச்சாரமும் போடப்பட்டது. சென்னையின் பல்வேறு இடங்களிலும் கரோனா தொற்று கண்டறியப்பட்டாலும், ஏப்ரல் 25 ஆம் தேதிக்குப் பின்னர் தான் கோயம்பேடு சந்தையில் பணிபுரிந்த இருவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.
கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியான கரோனா பாதிப்பாளர்கள் விவரத்தில், சென்னையில் புதிதாக 103 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கான காரணத்தை ஆய்வு செய்த போதுதான் கோயம்பேடு இதற்கான முக்கியக் காரணியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்குப்பின் தான் கோயம்பேடு சந்தையின் மற்ற வியாபாரிகள், பணியாளர்கள், வெளியூர் வியாபாரிகள், சந்தைக்கு வந்து சென்றவர்கள் எனக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியை மக்கள் நல்வாழ்வுத்துறையும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்டன. கோயம்பேட்டில் பணிபுரிந்தவர்கள் தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களுக்கு சுமார் 6,984 பேர் சென்றுள்ளனர்.
அவர்களில் அரியலூர் மாவட்டத்திற்கு 2,615 பேரும், கடலூர் மாவட்டத்திற்கு 1,915 பேரும், விழுப்புரம் மாவட்டத்திற்கு 891 பேரும், பெரம்பலூர் மாவட்டத்திற்கு 613 பேரும், சென்னை மாவட்டத்தில் 446 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 124 பேர் என, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கும் சென்றுள்ளனர்.
அவர்கள் அனைவரையும் மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறையின் உதவியுடன் கண்டறிந்து சளி பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வந்துக் கொண்டிருக்கின்றன. இதுவரை, சுமார் 1,589 பேருக்கு கோயம்பேட்டில் இருந்து தொற்று ஏற்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள கரோனா பாதிப்பு குறித்த தினசரி புள்ளி விவரத்தின் அடிப்படையில்...,
- சென்னையில் கடந்த 1 ஆம் தேதி புதியதாக 176 பேருக்கு தொற்று உறுதியாகி 1,082 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் 7 ஆம் தேதி 316 பேருக்கு தொற்று ஏற்பட்டு 2,644 பேர் என அதிகரித்து இருக்கிறது.
- அரியலூர் மாவட்டத்தில் மே 1 இல் 8 பேருக்கு இருந்த கரோனா, 6 ஆம் தேதி பல மடங்காகி 188 பேருக்கும், 7 ஆம் தேதி 24 பேருக்கும் என 246 பேருக்கு தொற்றி உள்ளது.
- கடலூர் மாவட்டத்தில் மே 4 ந் தேதி 122 பேருக்கும், 6 ஆம் தேதி 95 பேருக்கும், 7 ஆம் தேதி 32 பேருக்கும் என 356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- விழுப்புரம் மாவட்டத்தில் மே மாதம் 1 ஆம் தேதி வரை 51 நபர்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் படிப்படியாக உயர்ந்து, 7 ஆம் தேதி 45 பேரோடு 205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதேபோல் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நீலகிரி, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர் என, 27 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1589 பேருக்கு மேல் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து சென்றவர்களின் மூலம் மாநிலம் முழுமைக்கும் தொற்று பரவி வந்தாலும், அவர்களை தனிமைப்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளதால் புதியதாக தொற்று பாதித்தவர் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருவதால், கரோனா மீண்டுமொருமுறை சுழன்றடிக்குமோ என மக்களும் சரி, மக்கள் நல்வாழ்வுத்துறையும் சரி கலக்கத்திலேயே உள்ளனர்.
இதையும் படிங்க: திருமழிசையில் சந்தை அமைக்கும் பணி குறித்து முதலமைச்சர் ஆய்வுக் கூட்டம்