சென்னை: கனமழை காரணமாகச் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படவேண்டிய 14 பயணிகள் விமானம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் சென்னை விமானநிலையத்திலிருந்து வெளிநாடுகள், உள்நாட்டிற்குள் இயக்கப்படும் விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
தாமதமாகக் கிளம்பிய விமானங்கள்
சென்னையிலிருந்து அபுதாபி, சார்ஜா, துபாய், கத்தார் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் 7 சர்வதேச விமானங்கள் 30 நிமிடங்களிலிருந்தது ஒரு மணி நேரம் வரையிலும் தாமதமாகக் கிளம்பின.
அதேபோல் உள்நாட்டு விமானங்களான கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஹைதராபாத், தூத்துக்குடி, அந்தமான் ஆகிய இடங்களுக்குச் செல்லும் 7 விமானங்கள் 15 நிமிடங்களிலிருந்து 30 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன. தொடர் மழை காரணமாகச் சென்னையிலிருந்து இன்று காலை வரை 14 விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன.
ஆனால், தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தாலும் வெளிநாடுகள், வெளியூர்களிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் அனைத்தும் இதுவரை தாமதமின்றி குறித்த நேரத்தில் வந்து தரையிறங்கின.
விமானங்களில் பயணிகளின் உடைமைகள் ஏற்றுவதில் காலதாமதம், பலத்த மழையால் பயணிகளின் வருகை தாமதம், விமானங்களில் உணவுப்பொருட்கள் ஏற்றுவதில் தாமதம் போன்ற காரணங்களால் புறப்பாடு விமானங்கள் மட்டும் தாமதம் ஆவதாக விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு : வெள்ள அபாய எச்சரிக்கை