சென்னை: கர்நாடக மாநிலம் மங்களூருவில் 1923 ஏப்ரல் 5 அன்று கே.சங்கர மேனன் - நாராயணி தம்பதிக்குப் பிறந்த சாரதா மேனன் சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தார். மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டம் பெற்ற அவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் 195ஆம் ஆண்டு மருத்துவக் கல்வியை நிறைவுசெய்தார்.
தேசிய மனநல மற்றும் நரம்பு அறிவியல் மருத்துவ மையத்தின் மனநல மருத்துவப் படிப்பை முடித்து நாட்டின் முதல் பெண் மனநல மருத்துவரானார். 1961ஆம் ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் முதல் பெண் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். பின்னர் அரசின் மனநல மருத்துவமனையின் தலைவராகவும் இருந்தார்.
வருத்தம் தந்த துயரச் செய்தி!
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவரது தொண்டினைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு 1992ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவித்தது. அதிமுக ஆட்சிக்காலத்தில் 2016ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கையால் சாரதா மேனன் அவ்வையார் விருதுபெற்றார்.
சென்னையில் உள்ள இந்தியன் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் சாரதா மேனனுக்கு 2016ஆம் ஆண்டுக்கான அன்னை தெரசா நினைவு விருதும் வழங்கப்பட்டது.
1984ஆம் ஆண்டில் ஸ்கார்ப் என்னும் சேவை நிறுவனத்தைத் தோற்றுவித்தார். அந்நிறுவனம் மன நோயாளிகளைப் பேணுதல், அவர்களுக்குச் சிகிக்சை, மறுவாழ்வு அளித்தல், தொழில், வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சிகள் அளித்தல் போன்றவற்றைச் செய்துவருகிறது.
இந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக டிசம்பர் 5ஆம் தேதி இரவு 8.20 மணியளவில் சென்னையில் உள்ள தனது வீட்டில் வைத்து சாரதா மேனன் (98) காலமானார். அவரது உடல் இன்று (டிசம்பர் 6) மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக அவரது மறைவுக்குத் தலைவர்கள், மருத்துவ வல்லுநர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் உடல்நலக்குறைவால் தனது 98ஆம் வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தத்திற்குள்ளானேன்.
சாரதாவின் மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனம்
சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயின்ற அவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் முதல் பெண் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். மன நோயாளிகளின் சிகிச்சையில், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் தனி முத்திரை படைத்த சாதனையாளர். அவர் சிறந்த மருத்துவர் மட்டுமல்லாது - சிறந்த நிர்வாகத் திறனும் படைத்தவர்.
சென்னையில் அவர் நிறுவி இயங்கிவரும் 'மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனம் (SCARF)' அவரது பங்களிப்புகளில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாகும். அவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு பத்ம பூசண் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
சிறந்த மருத்துவச் சேவைக்காக - தமிழ்நாடு அரசின் அவ்வையார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற சாரதா மேனனின் மறைவு மருத்துவத் துறைக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் உறவினர்களுக்கும், மருத்துவத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவில் இந்துக்கள் விரைவில் சிறுபான்மையினராக மாறுவர் - தொகாடியா கவலை