சென்னை: சென்னையில் நேற்று (ஏப். 23) நடைபெற்ற 'TechKnow-2022' கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிறைவு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "வேலை இல்லை என்று ஒரு பக்கம் இளைஞர்கள் சொல்கிறார்கள். வேலை இருக்கிறது, ஆனால் அதற்கு தகுதி வாய்ந்த இளைஞர்கள் கிடைக்கவில்லை என்று தொழில் நிறுவனங்கள் சொல்லிக் கொண்டு இருக்கின்றன.
எத்தகைய தகுதியை இளைஞர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் என்று நிறுவனங்கள் சொல்லியாக வேண்டும். அத்தகைய தகுதியை இளைஞர்களுக்கு ஊட்டுவதாக பல்கலைக்கழகங்கள் மாற வேண்டும். இந்த பரஸ்பர நட்புறவு உங்களுக்குள் இருக்க வேண்டும். அதனை அரசு அலுவலர்கள் உணர்ந்திருப்பதன் வெளிப்பாடுதான் இதுபோன்ற கருத்தரங்குகள்.
உயர் கல்வி விகிதம் ஒப்பீடு: நம்பர் 1 முதலமைச்சர் என்று சொல்வதைவிட, நம்பர் 1 தமிழ்நாடு என்று சொல்லக்கூடிய நிலை வரவேண்டும். அதற்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை எல்லாம் தொடர்ந்து நம்முடைய அரசு நிறைவேற்றி வருகிறது என்று உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும். உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் என்பது அகில இந்திய அளவில் 27.1 விழுக்காடாக இருக்கிறது. ஆனால் தமிழகம் 51.4 விழுக்காடு பெற்று சிறப்பான இடத்தில் உள்ளது.
இந்தாண்டு இந்த புள்ளிவிவரத்தை எடுத்தால் 54 விழுக்காடாக கூட கூடியிருக்கலாம். உயர்கல்வியில் அனைத்து மாணவர்கள் சேர்க்கை விகிதங்களிலும் தமிழ்நாடு முதலிடம் பெற்று முன்னிலையில் இருக்கிறது. உயர்கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள், தமிழகத்தின் மொத்த மாணவர்களின் சேர்க்கை விகிதத்தின் அதீத வளர்ச்சிக்கும், சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பிரிவு மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கும் சான்றாக உள்ளது.
கல்வி நலத்திட்டங்கள்: இலவச பாடப்புத்தகங்கள், பேருந்து பயண அட்டை, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி உதவித்தொகை திட்டம், ஆதிதிராவிட மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, முதுநிலை பட்டமேற்படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகை போன்றவைகள் தமிழ்நாட்டில் வழங்கப்படுகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் முன்னுரிமை அடிப்படையில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கியதோடு, கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்களையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டு இருக்கிறது. நம்முடைய சாதனைக்கு சமூகநீதிக் கொள்கையும் முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது.
ஆர்வமும், துடிப்பும் மிக்கவர்கள்: பல்வேறு பன்னாட்டு தொழில்துறை நிறுவனங்கள் தமிழ்நாட்டிலல் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் பொறியியல் பட்டதாரி மாணவர்கள் வளாகத் தேர்வு (Campus Interview) மூலம் உயர்நிலை பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டு பொறியியல் மாணவர்களும் இயல்பிலேயே புதியதாக ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், அதனை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்ற துடிப்பும், உணர்ச்சியும் உள்ளவர்கள்.
மேலும், தற்போதுள்ள நவீன தொழிலகங்களின் எதிர்பார்ப்புகள், எதிர்கொண்டு வரும் சவால்கள் ஆகியனவற்றை கண்டறியவும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் பயின்று பட்டம் பெற்ற பட்டதாரி மாணவர்களிடையே, தொழில்நுட்பத் திறன் மற்றும் வேலைவாய்ப்பு பெறுதலுக்கான திறன்களை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
'நான் முதல்வன்': இதில் முக்கியமான புதிய திட்டம்தான் 'நான் முதல்வன்' என்ற திட்டம். நீங்கள் எதை தேர்ந்தெடுத்து, அதிலே வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதிலே முதல்வனாக வரவேண்டும் என்பதற்காகத்தான் 'நான் முதல்வன்' என்று பெயரிட்டு அந்த திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டின் மாணவ, இளைஞர்களின் அறிவுச் சக்தியை மேம்படுத்துவதுதான் இந்த திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும்.
தமிழ்நாட்டில் உள்ள கல்வி மற்றும் தொழில்துறைகளின் வளர்ச்சி பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு, கல்வித் துறையில் மேலும் உயரிய நிலையை அடைவதற்கு பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்துக் கொண்டு வருகிறது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டாகதான் இந்த இரண்டு நாள் கண்காட்சி மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.
பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு திறன்மிகு பயிற்சி அளித்து ஒரு சிறந்த பொறியாளர்களை மேம்படுத்துவதே தொழில் துறையின் வெற்றியாகும். மேலும், தற்போதைய சூழலில் உள்ள தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பொறியியல் பட்டதாரி மாணவர்களை உருவாக்குவது இன்றியமையாததாக அமைந்திருக்கிறது.
அதற்கேற்ப அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் சங்கம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை ஒன்றிணைந்து பொறியாளர்களின் மேம்பாடு தொடர்பான 'TECHKNOW-2022' என்ற கண்காட்சி மற்றும் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.
TECHKNOW-2022-வின் நோக்கங்கள், சிறப்பானதாக அமைந்துள்ளன. அவை,
➢ வளர்ந்து வரும் முக்கியத் துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இளைஞர்களை உருவாக்க நினைக்கிறீர்கள்.
➢ புதிய தொழில்முனைவோரை அடையாளம் காண நினைக்கிறீர்கள்.
➢ சுயவேலை வாய்ப்புக்கான சிறந்த யோசனை சொல்பவர்க்கு பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளீர்கள்.
➢ இதில் பங்கெடுக்கும் மாணவர்களுக்கு கல்லூரியை விட்டு வெளியேறும் போது வேலையும் செல்ல வழிவகை செய்துள்ளீர்கள்.
➢ மேலும் புதிய தொழில்நுட்பங்களும், புதிய தொழில்நிறுவனங்களும், ஆதரவு அளிக்கின்ற கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கண்காட்சியில் வைப்பதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்தகைய கருத்தரங்குகள், போட்டிகள், திறமைவளர்க்கும் கண்காட்சிகள் மூலம் மாணவர்களை ஊக்குவிப்பதுடன், வருங்காலத்தில் தொழிற்திறன் வாய்ந்த மனிதவளம் மேன்மேலும் அதிகரிக்கவும், பொறியியல் பட்டதாரிகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யும் என நான் நம்புகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான்- அமைச்சர் அன்பில் மகேஷ்