தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, 2,500 ரூபாய் ரொக்கம் உள்பட பரிசுப் பொருள்கள் தொகுப்பு வழங்கப்பட்டுவருகிறது. இதற்கான டோக்கன்களில் முதலமைச்சர், அமைச்சர்களின் புகைப்படங்கள் இடம்பெறத் தடை கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், டோக்கன்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படங்களை அச்சிடக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. ஆனால், பொங்கல் பரிசு தொடர்பாக ஆளுங்கட்சியினர், ரேஷன் கடைகள் முன் பேனர்கள் வைத்துள்ளதாகக் கூறி, திமுக தரப்பில் மீண்டும் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தரப்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் வில்சன், “அரசு சின்னம் பதித்து 39 ஆயிரம் ரேஷன் கடைகளின் முன் அனுமதியின்றி ஆளுங்கட்சியினரின் பேனர்கள் வைக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகிறது” எனக் குற்றஞ்சாட்டினார்.
மேலும், அனுமதியின்றி பேனர்கள் வைக்க மாட்டோம் என ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்ததையும் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பொங்கல் பரிசுத் திட்டத்துக்கு உரிமை கோரி எதிர்க்கட்சியும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளதாக கூறினார். மேலும், தேர்தல் நேரத்தில் தங்கள் சாதனைகளை மக்களிடம் கொண்டுசேர்க்க பேனர்கள் வைக்கப்படுவதாகவும், அதற்குத் தடைவிதிக்கக் கூடாது என்றும், ஏற்கனவே பொங்கல் பரிசுத் தொகுப்பு பையில் முதலமைச்சர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அவற்றை வழங்கக் கூடாது என உத்தரவிடக் கூடாது என்றும் கோரிக்கைவிடுத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ரேஷன் கடை அருகில் அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள், பேனர்கள் இருக்கக் கூடாது, அவ்வாறு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தால் அவற்றை உடனே அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர். அதேசமயம், பொங்கல் பரிசுத் தொகுப்பு பையில் முதலமைச்சர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் படங்கள் இடம்பெற அனுமதித்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க...மயிலாடுதுறையில் உதயநிதியின் உருவ பொம்மை எரிப்பு