தமிழ் மாநில கட்சியின் தலைவரும், முன்னாள் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவருமான பால் கனகராஜ், பாரதிய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மேலும், தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாத் அமைப்பின் முகமது ஃபெரோஸ் உள்ளிட்டோரும் மாநிலத் தலைவர் எல். முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், ”பால் கனகராஜ், முகமது ஃபெரோஸ் போல் மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, கட்சியில் இணைய வந்தால் அவர்களை வரவேற்க தயாராக உள்ளோம். மோடியின் ஓராண்டு ஆட்சியில், பல ஆண்டு பிரச்னையான அயோத்தி விவகாரத்தில் முடிவு எட்டப்பட்டு, ராமர் கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல், காஷ்மீரில் 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா விவகாரத்தில் மத்திய அரசின் அனைத்து நெறிமுறைகளையும் மாநில அரசு பின்பற்றி வருகிறது. தமிழ்நாடு அரசு ஒவ்வொரு மண்டலத்திற்கும் சிறப்பு அலுவலர்களையும், அதனை கண்காணிக்க அமைச்சர்களையும் நியமித்து செயல்பட்டு வருகிறது.
தொடர்ந்து, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து, மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியை கடைப்பிடித்தால் கரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு வரலாம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: சென்னையில் சங்கர் நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலருக்கு கரோனா