சென்னை : பப்ஜி விளையாட்டை ஆபாசமாக பேசி இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்து வந்தவர் மதன். இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் வந்த நிலையில், மதன் தலைமறைவானார்.
இதனால் மதனின் மனைவி கிருத்திகாவிடம் சைபர் கிரைம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அவர் மதனுடன் இணைந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை தனிப்படை போலீசார் கடந்த 16 ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கிருத்திகாவை ஜூன் 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து 8 மாத கைக்குழந்தையுடன் கிருத்திகா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கிருத்திகா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கிருத்திகாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.