சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டத்தில் 112 கோடி ரூபாய் செலவில் பெரும்பள்ள ஓடையின் இருபுறமும் சுவர் எழுப்பத் தடை கோரி, இயற்கை வளம், பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த மனுவில், சுவர் எழுப்பினால் ஓடையின் அகலம் சுருங்கி, அதில் ஓடும் தண்ணீர் ஊருக்குள் புகுவதற்கான இடர் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓடையின் இருபுறமும் சுவர் எழுப்புவது உயர் நீதிமன்ற உத்தரவிற்கு முரணாக உள்ளதால், அந்தக் கட்டுமானங்களை மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டுமென்றும், ஓடையின் போக்கை மாற்றக்கூடாது என உத்தரவிட வேண்டுமென்றும் மனுவில் கோரிக்கைவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, நீர்நிலைகளைப் பாதுகாக்கும் வகையில் அனைத்து தாலுகாக்களில் உள்ள நீர்நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களை எடுத்து, மார்ச் 17ஆம் தேதிக்குள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டது.
அந்தப் புகைப்படங்களின் தொகுப்பை தலைமைச் செயலாளருக்கும், உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளருக்கும் அனுப்பிவைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், பெரும்பள்ள ஓடையில் சுற்றுச்சுவர் கட்டுவதைப் பொறுத்தவரை, நீர்வழிப் பாதையில் குறுக்கீடு ஏற்படுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது எனவும், நீரோட்டத்துக்குத் தடை ஏற்படுத்தும் கட்டுமானங்களை இடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி, விசாரணையை தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: அரசு செலவில் ஆளுங்கட்சி விளம்பரம்: தகுந்த நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு!